தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட ஏராளமானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையில் திரைத்துறையில் வெளிவந்து வெற்றிகரமாக அமைந்த அயோத்தி திரைப்பட இயக்குநர் மந்திரமூர்த்தி ஆதிச்சநல்லூரை பார்வையிட வந்தார். அந்த சமயத்தில் கருங்குளம் அருகே உள்ள அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவ மாணவிகளும் ஆதிச்சநல்லூரை பார்வையிட வருகை தந்தனர்.
மாணவ மாணவிகளுடன் திரைப்பட இயக்குநர் மந்திரமூர்த்தி ஆர்வத்துடன் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்வையிட்டார். அவர்களுக்கு தொல்லியல் ஆய்வாளர் எத்தீஸ்குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் விளக்கமளித்தனர்.
அனவரதநல்லூர் அரசு உயர்நிலைபள்ளியில் 6 முதல் 9 வகுப்பு வரை 15 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களை களப்பணி செய்து, அதுகுறித்து அவர்களே கட்டுரை எழுதி சமர்ப்பிக்கும் விதமாக ஆதிச்சநல்லூர் வருகை தந்தனர். அவர்கள் கருத்துக்களையும் கேட்டு மிக அழகாக தங்களது நோட்டுகளில் குறிப்பெடுத்துக் கொண்டனர். அதன்பின் அங்கு வைக்கப்பட்ட எலும்பு கூடு, ஆதிச்சநல்லூர் மியூசியம் மாடல் உள்பட அங்கு கிடைத்த பொருள்களை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் ஆர்வமாக ஆய்வாளர்களிடம் தங்கள் சந்தேகங்கள் கேட்டறிந்தனர். ஆதிச்சநல்லூரை பார்வையிட்ட திரைப்பட இயக்குநர் மந்திரமூர்த்தி அந்த மாணவர்களோடு அமர்ந்து அவர்கள் செய்கையை உற்சாகமூட்டினார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியபோது, ஆதிச்சநல்லூர் குறித்து கேள்விப்பட்டேன். இன்று வருகை தந்து ஆதிச்சநல்லூரை பார்வையிட்டேன். ஆதிச்சநல்லூர் மிகவும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. ஆதிச்சநல்லூரால் தமிழர்களான நம் அனைவருக்கும் பெருமைபட்டுள்ளோம். இந்தியாவிலேயே முதன் முறையாக இங்கு தான் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு கூடுதல் பெருமையாகும். இங்கு அரசு பள்ளி மாணவ மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிடுவது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இதுபோலவே திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் இங்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். தினமும் சராசரியாக 100க்கு மேற்பட்டவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து செல்கிறார்கள் என கேள்விப்பட்டேன். தமிழர்களின் நாகரீகம் அறிய இதை விட அதிக மாணவர்கள் இங்கு வந்து செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனைத்து கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் வந்து செல்ல அறிவுருத்த வேண்டும். தினமும் ஆதிச்சநல்லூர் குறித்து அதிக செய்திகள் ஊடகங்களில் வரவேண்டும். இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியத்தினை அமைத்து விட்டு, அதை யாரும் பார்க்காமல் இருந்தால் நாம் தமிழர்களாக இருப்பதில் பயன் இல்லை. எனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களுடன் இணைந்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறேன். அடுத்த படமும் சமூகம் சார்ந்த ஒரு விஷயத்தை வைத்தே இயக்க உள்ளேன். அயோத்தி எப்படி மனிதம் தான் வெல்லும் என்று கூறினேனோ, அதுபோலவே அடுத்த படத்திலும் மிகப்பெரிய செய்தி சொல்லும் திரைப்படமாக எடுப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார், மனோன்மணியம் தொல்லியல் கழகத்தலைவர் முனைவர் சுதாகர், முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வாளர் மணிகண்டன், எக் பவுண்டேசன் நிவேக், அனவரதநல்லூர் உயர் நிலைப்பள்ளி தமிழாசிரியர் துரைபாண்டியன், வரலாற்று துறை ஆசிரியர் விஜயபுஷ்பா உள்பட பலர் உடனிருந்தனர்.


