வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குரும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முன்பெல்லாம் விழாக்காலங்களில் மட்டுமே வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருவர். ஆனால் தற்போது தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்களும் ரயில் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவைக்கேற்ப ரயில்கள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதேபோல் திருச்செந்தூருக்கு விஷேச நாட்களில் இயக்கப்படும் ரயில்கள் குரும்பூர் ரயில்நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இங்குள்ளவர்களும் மக்கள்தான், நாங்களும் திருச்செந்தூருக்கோ, நெல்லைக்கோ அந்த சிறப்பு ரயில்களில் செல்வதில் ரயில்வே மேலதிகாரிகளுக்கு என்ன பிரச்னை ஏற்படப்போகிறது என்று தெரியவில்லை. நாங்களும் சிறப்பு ரயில்களை குரும்பூர் ரயில்நிலையத்தில் நின்று செல்ல அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆனால் ரயில்வே அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர். திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு அடுத்து அதிக வருவாய் கொடுப்பது குரும்பூர் ரயில் நிலையம்தான். இது அனைத்து ரயில்வே அதிகாரிகளுக்கும் தெரியும். தெரிந்தும் சிறப்பு ரயில்கள் என்ன காரணத்திற்காக குரும்பூர் ரயில் நிலையத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில் வரும் 30ம் தேதி வைகாசி விசாகத்திற்கு திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு நெல்லைக்கும், நெல்லையிலிருந்து 11.30 மணிக்கு திருச்செந்தூருக்கும் என 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களையாவது குரும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமல்லாது அனைத்து சிறப்பு ரயில்களையும் குரும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரும்பூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


