திருச்செந்தூர் கோவிலில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது முறைகேடான வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல சில அர்ச்சகர்கள் ரூ.4,000 கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் நேரடியாக ஜி-பே மூலம் ரூ.4,000 பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அவர் அமைச்சர் என்பது தெரியவந்த நிலையில், பணம் பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாக சிக்கினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அமைச்சர் விசாரணை நடத்தினார்.
ஆய்விற்கு பின்னர் அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
பணம் கேட்டது தொடர்பாக யாரிடமும் மன்னிப்பு கடிதம் கேட்கவில்லை. விளக்க கடிதம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்


