காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலாய விண்ணேற்பு பெருவிழா வருகிற 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பசிலிக்கா பேராலாயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் விண்ணேற்பு பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் வருகிற 6-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து நேற்றுகாமநாயக்கன்பட்டி ஆலயத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பசிலிக்கா பேராலாயத்தில் 342-வது ஆண்டு விண்ணேற்பு பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயம் பசிலிக்கா பேராலயமாக உயர்த்தப்பட்டது.
அன்னையின் விண்ணேற்பு பெருவிழா வருகிற 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் மாலையில் திருப்பலி மற்றும் மறையுரை சிந்தனை நிகழ்வுகள் நடக்கின்றன. 9-ஆம் தேதி காலை 6 மணிக்கு மரியன்னை மாநாடு, 10-ஆம் தேதி புது நன்மை விழாவும், 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறும்.
15-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தேரடி திருப்பலி, மதியம் 12 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, மாலை 4 மணியளவில் இந்தியில் திருப்பலி, இரவு 7 மணியளவில் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. திருவிழாவிற்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பெரிய பந்தல் அமைத்து தங்கும் வசதிகள் உள்ளிட்டவை செய்து தரப்படுகிறது.
14-ஆம் தேதி பக்தர்களின் வசதிக்காக பொது விடுமுறை அளிக்க கோரி பேராலயம் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பேராலய பங்குத்தந்தை மோயீசன், உதவி பங்குத்தந்தை நிரோ ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து வருகின்றனர்.


