தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து இரயில்களும் மேலூர் இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், தென்னக இரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், “தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ள மேலூர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு இரயில் நிலையமானது அருகில் உள்ளதால் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியான ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளை இணைக்க கூடிய இடமாகவும், இரயில் பயணிகள் ஒன்றாம் கேட் மற்றும் இரண்டாம் கேட் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து குறித்த நேரத்தில் பயணத்தை மேற்கொள்வதற்கு ஏற்ற பகுதியாகும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கு வந்து செல்லக்கூடிய ஒரு சில இரயில்கள் மட்டுமே இந்த மேலூர் இரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. மைசூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ், ஓகா எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்களும் அதேபோல் முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடியில் இருந்து புறப்படும்போது இந்த இரயில் நிலையத்தில் நின்று செல்வது இல்லை.
இதனால் இரயில் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து உள்ளிட்ட வசதிகள் கிடைக்காமலும், காலவிரையம் மற்றும் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இது குறித்து கடந்த வாரம் தூத்துக்குடி இரயில் நிலையத்தில் நடைபெற்ற இரயில் நிலைய பயனாளர்கள் ஆலோசனைக்குழு கூட்டத்தில் எனது கோரிக்கையை முன்வைத்தேன்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியைச் சார்ந்த இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தாங்கள் தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து இரயில்களையும் மேலூர் இரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


