உலக நாகரீகத்தில் தொட்டில் என்றழைக்கப்படும் ஆதிச்சநல்லூருக்கு பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் வருகை தந்தார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் வந்தார்.
ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயகுனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு செய்து வந்தனர். அந்த அகழாய்வு முடிந்து அந்த இடத்திலேய உள்ளது உள்ளபடியே காட்சி படுத்தும் பணிக்காக ஆய்வாளர் மத்திய அரசின் ஆணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சிந்து சமவெளி ஆய்வாளரும் உலகம் முழுவதும் சென்று தொல்லியல் சம்பந்தப்பட்ட ஆய்வை செய்து வருபவருமான பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பார்வையிட வந்தார். இவர் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் பேச வந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொல்லியல் களங்களான கொற்கை, சிவகளை ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களை பார்வையிட வந்தார். ஆதிச்சநல்லூர் வருகை தந்த அவர் அங்கு தங்கம் மற்றும் வெண்கலம் பொருள்கள் கிடைத்த குழி உள்பட பல குழிகளையும், ஆதிச்சநல்லூரில் பி சைட் எனப்படும் இடத்தினையும் பார்வையிட்டார். அவருக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் அருண், மணிகண்டன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து அவர் அங்குள்ள மலையரசி அம்மன் கோயில் மற்றும் தாமிரபரணி ஆற்றுபகுதியையும் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம், ஊராட்சி எழுத்தர் சிவா உள்பட பலர் இருந்தனர்.
அதன் பின் அவர் தூத்துககுடியில் நடைபெறும் புத்த கண்காட்சியில் பேச கிளம்பி சென்றார்.


