விடுப்பட்ட தகுதியான மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை மற்றும் மகளிர் திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் மரு.தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், ஆகியோர் முன்னிலையில் இன்று (28.10.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில் “பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களும் ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்காக வழிவகை செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.1000/- அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 டெபிட் கார்டுகள் மற்றும் 255 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்து சகோதரிகளுக்கு ரூ.26.97 கோடி அளவில் கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் மகத்தான திட்டத்தை முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள். 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி தான் உங்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தேதி என்றாலும், ஒரு நாள் முன்னதாக 14 ஆம் தேதியே தமிழ்நாடு அரசால் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு 1000 டெபிட் கார்டுகளை வழங்குகிறோம் என்றால், இவை பணம் எடுப்பதற்கான கார்டுகள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிற துருப்புச்சீட்டு. இந்தத் திட்டத்தை பின்பற்றி, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தப்படுகிற போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கபடாதவர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கிற வசதியைச் செய்துள்ளோம். இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும், உங்கள் மேல்முறையீட்டை பரிசீலிக்க துணை ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளோம். மகளிர் மட்டுமன்றி திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளும் இன்றைக்கு இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் பேசியது போல், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம்.
மகளிர் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் எனும் உயரிய எண்ணத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்க இந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைதினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் 25 ஆயிரம் பேருக்கு ரூபாய் 26.97 கோடி மதிப்பில் கடன் உதவிகளை வழங்கியுள்ளோம்.
பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் அதை செய்தார்கள், கலைஞர் அவர்களைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்களும், மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றம் மூன்று வழிகளில் தடுக்கப்பட்டிருக்கிறது என்று பெரியார் சொன்னார். ஒன்று, கலாச்சார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு, சட்ட ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று, பொருளாதார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று தடைகளையும் நீக்கினால் போதும் பெண்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலை ஏற்பட்டு விடும் என்று பெரியார சொன்னார்கள்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு கலாச்சார ரீதியாக இருந்த தடைகள் என்னென்ன? தந்தை பெரியார் அவர்களே சொன்னார், பணக்காரன் – ஏழை அடிமைத்தனத்தை விட, மேல்ஜாதி – கீழ்ஜாதி அடிமைத்தனத்தை விட, முதலாளி – தொழிலாளி அடிமைத்தனத்தை விட மோசமனது இந்த ஆண் – பெண் அடிமைத்தனம் என்று சொன்னார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. பெண்களுக்கு படிப்புத் தேவையில்லை. குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் பெண்களுக்கு வேலை. இப்படி தான் நம்முடைய சமுதாயம் ஒரு காலத்தில் இருந்தது. இது எல்லாத்தையும் எதிர்த்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தது நம்முடைய அரசு. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் எல்லாம் கலாச்சார ரீதியாக முடக்கப்படும் பெண்களை முன்னேற்றுவதற்கான நமது திராவிட மாடல் திட்டங்கள்.
இரண்டாவதாக, சட்ட ரீதியாகப் பெண்களுக்கு இருந்த முட்டுக்கட்டை என்ன? ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும், ஆண் பிள்ளைக்கு மட்டும் தான் அப்பா சொத்திலே உரிமை இருக்கிறது. பெண் பிள்ளைக்கு சொத்திலே உரிமை கிடையாது என்கிற நிலை தான் சட்ட ரீதியாக இருந்தது. ஆனால், நமது முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான், தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று 30 வருடங்களுக்கு முன்பே இதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு எல்லா பெண்களுக்கும் சொத்திலே உரிமைக் கிடைத்திருக்கிறது. அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பெண்களுக்கு இருக்கக் கூடிய முட்டுக்கட்டைகள் என்ன? ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, பணத்திற்காக தனது அப்பாவை எதிர்பார்க்க வேண்டும். அந்தப் பெண் வளர்ந்து திருமணம் ஆனதும் பணத்திற்காக கணவனை எதிர்பார்க்க வேண்டும். அந்த பெண் வயது முதிர்ந்த காலத்தில் பணத்திற்காக தனது மகனை எதிர்பார்த்திருக்க வேண்டும். இப்படி தான் இருக்கிறது பெண்களின் நிலை.
இந்த நிலைமை மாறி, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர வேண்டுமானால் அவர்களும் ஆண்களைப் போல தாங்கள் விரும்பும் கல்வியைக் கற்க வேண்டும், தங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலையிலே அமர வேண்டும். அதனால், நாட்டிலேயே முதல்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் , 1989 ஆம் ஆண்டே மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கினார்கள்.• கலைஞர் வழியில், நம்முடைய திராவிட மாடல் அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது. படிப்பதற்காக அல்லது வேலைக்காக பெண்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டித் திட்டம் மிக முக்கியமானது. 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். பெண்களுடைய சிரமத்தை குறைக்கக் கூடியத் திட்டம் அது. காலையிலே எழுந்து வேலைக்கு செல்லக் கூடிய பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு டிபன் சமைச்சு வச்சுட்டு போறது எவ்வளவு சிரமம்? அந்த சிரமத்தை இந்த திட்டம் போக்கியிருக்கிறது.
இதுவரை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மகளிர் முன்னேற்றத் திட்டங்களிலேயே முதன்மையானது என்று சொல்லக் கூடிய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம். இந்த திட்டத்திற்கு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் வைத்திருக்கும் பெயர் தான் இதிலே முக்கியமானது. இந்த திட்டம் மகளிருக்கான உரிமை என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று பெயர் வைத்துள்ளார்கள். பெண்களுடைய உழைப்புக்கு ஓர் அண்ணனாக இருந்து நம்முடைய முதலமைச்சர் இப்போது அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். உங்களுடைய மகனாக, சகோதரனா இருந்து இதைப் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் கல்வியிலே, பொருளாதாரத்திலே உயர வேண்டும். அதேபோல் பொது வாழ்க்கையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். பெண்கள் மொபைல் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நிறைய செய்திகள் வரும். அப்படி வருகிற செய்திகள் உண்மையா பொய்யா என்று நீங்கள் ஆராய்ந்து அதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும்.
உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்கள் வந்திருக்கிறார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள மேயர், நகராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளில் 50 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இந்த சாதனையை நடத்திக் காட்டியது நம் திராவிட மாடல் அரசு. பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக இருப்பது தான் பெண்ணுரிமைக்கான அடித்தளம். இந்த நேரத்தில் மகளிருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தந்தை பெரியார் சொன்னது தான். மகளிர் நீங்கள் அனைவரும் முற்போக்காகவும் பகுத்தறிவுடனும் சிந்திக்க வேண்டும். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் முற்போக்காக, சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். எனவே, மகளிர் நிறைய படிக்க வேண்டும், முற்போக்காக சிந்திக்க வேண்டும். அப்போது தான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் முன்னேற முடியும்.
ஆண்களை விட பெண்கள் தான் தங்களுடைய வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் குடும்பப் பராமரிப்புக்காக செலவிடுகிறார்கள். எனவே, பொருளாதாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தரும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையப் போகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு வழங்கப்படும் இந்த கடனுதவியை, தமிழ்நாடு முதலமைச்சர் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை.
மாறாக சுய உதவிக் குழு சகோதரிகளின் உழைப்பிற்கான நம்பிக்கைத் தொகையாகத் தான் பார்க்கிறார்கள். இங்கு வந்துள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கும் எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விடுப்பட்ட தகுதியான மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். பயன்பெற்ற பயனாளிகள் அனைவரும் தமிழ்நாடு அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல நீங்கள் ஒவ்வொருவரும் Brand Ambassador ஆக – தூதுவர்களாக மாறிட வேண்டும் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு இவ்வாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேசினார்கள்.
அதனைத்தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 1000 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான அட்டையினையும், மகளிர் திட்டத்தின்கீழ் 255 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 24,529 பயனாளிகளுக்கு ரூ.26.97 கோடி மதிப்பில் கடனுதவிகளும் வழங்கினார்கள்.
முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்து பல்துறை பணி விளக்க முகாமினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பார்வையிட்டார்கள்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), மாவட்ட வருவாய் அலவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கனராஜ், வட்டாட்சியர்கள் இராஜா சிங் (அகஸ்தீஸ்வரம்), கண்ணன் (கல்குளம்), முருகன் (திருவட்டார்), அனிதா குமாரி (கிள்ளியூர்), வினைதீர்த்தான் (தோவாளை), குமாரவேல் (விளவங்கோடு), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், மாமன்ற உறுப்பினர் செல்வி.கௌசிகா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின், புஷ்பலீலா ஆல்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


