தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 6 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வில் சங்க இலக்கியத்தில் கூறப்படும் 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, 9 அடுக்குகள் கொண்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்கறுக்கும் தொழில் கூடம் இருந்ததற்கான அடையாளங்கள், வெளிநாடுகளுடன் வாணிபத் தொடர்பு இருந்ததற்கான அடையாளங்கள், செங்கல் கட்டுமான அமைப்புக்கு இடையில் 4 அடி உயரம் கொண்ட ஈரடுக்கு கொள்கலன் என ஏராளமான பழங்கால நாகரிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் அகழாய்வு பணிகள் வருகின்ற 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்காக தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் ஆவணப்படுத்தும் பணியில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அடுத்தாண்டு இந்த கொற்கையில் கடல் சார் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


