
ஓவியர் வள்ளி நாயகத்தினை பொறுத்தரை உருவப்படம் வரைவதிலும் மிக நேர்த்தியாக வரைவார். அதே போல் ஒரு சம்பவத்தை அவர்களை கூறினார்கள் வழக்கமாக ஓவியங்கள் மாதிரிகளாக கொடுத்து வரைய சொல்லுவார்கள் ஆனால் நண்பர் ஒருவர் அவருடைய அன்னையின் படத்தை வரைவதற்கு அன்னையின் சாயல் உள்ளவர்களின் படங்களை மட்டும் தந்து வரையக் கேட்டுக் கொண்டார்.
கொஞ்சம் கால அவகாசம் கேட்டு அவருக்கு அதை பல மாதிரிகள் வரைந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் பின்னிரவு பொழுதில் லேசாக தெற்றுப்பல் உள்ள ஒரு உருவம் மனதில் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தது .
மறுநாள் காலை அந்த ஓவியத்தில் லேசாக தெற்றுப்பல் தெரிவது போல வைத்து உடன் அந்த படத்தை உரியவர்க்கு அனுப்பினேன் அவருக்கு ஆச்சரியம் எங்கள் அம்மாவிற்கு லேசாக தெற்றுப் பல் இருந்தது என்பதை நான் சொல்லவில்லையே எப்படி வரைந்தீர்கள் என்றார்கள் ஒன்று மில்லை ஒரு உணர்வு இப்படி வரைவோமே என்று கூற என்று கூறியதும் அவர்கள் வியந்து உணர்ந்து வரைந்த ஓவியர் ஐயா நீங்கள் எனப் நெகிழ்ந்ததையும் கூறுகிறார். இதனால்தான் நான் இவரை தெய்வ ஓவியர் என்று கூறுவேன்.
உருவ ஓவியங்கள் வரைவது மிகவும் கவனமாகவும் உணர்வு பூர்வமாகவும் வரைவது என்பது இவருக்கு இயல்பாகி விட்டது.
திருநெல்வேலியின் திறனாய்வு இலக்கிய ஆளுமையான தி.க.சி. அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்தவர். என்னை தி.க.சி அய்யாவோடு அறிமுகப்படுத்தியதும் வள்ளிநாயகம் தான். இவ்வளவு தாமதமாக அறிமுகம் ஆகியி ருக்கிறோம் நாம். பரவாயில்லை .இன்னும் காலம் இருக்கிறது என்று தி.க.சி. . கூறி உற்சாகப்படுத்தி தொடர்ந்து எழுத ஊக்கப் படுத்தி யதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அதே போல் பொருநை இலக்கிய வட்ட தளவாய் ராமசாமி அவர்களோடும் தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் , பேரா. தொ.ப. பேரா. நா.ராமச்சந்திரன் , வரலாற்று ஆய்வாளர் செ.திவான் எழுத்தாளர் நாறும்பூநாதன் உள்ளிட்ட பல ஆளுமைகளுடனும் நெருங்கிய நட்பு கொண்டவர் இவர்
புதுமைப்பித்தன் நூற்றாண்டு , திருநெல்வேலி எழுச்சி , திருநெல் வேலியின் பல முக்கிய வரலாற்றுப் பதிவுகள் அனைத்திலும் தூரிகை யால் அழகு சேர்த்து வருபவர்.
திருநெல்வேலிஅரசு அருங்காட்சி யகம் பாளை திருவனந்தபுரம் சாலையிலிருந்து, ஊமைத்துரையை சிறை வைத்திருந்த கட்டடத்திற்கு மாற்றுவதற்கு முன் முயற்சி எடுத்தவர்.இவர் வரைந்த ஊமைத்துரை ஒவியமும் அங்குண்டு.
திருநெல்வேலி டவுன் ஸ்ரீ மந்திர மூர்த்தி மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணியைத் தொடங்கி தமிழ்நாடு அரசின் பாடத்திட்டப் பணிகளில் பணியாற்றி, பாளை மு.ந.அப்துர் ரஹ்மான் மேல் நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகித் தற்போது மாற்றுப் பணியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப் பட்டுள்ள செந்தமிழ்ச் சிற்பகள் அரங்கத்தின் கலை, தமிழ்ப் பதிவுகளைச் செய்து வருகிறார்.
தமிழுக்காக உழைத்த முன்னோடிகள் பலரை வரைந்தும் அவர்களின் பணிகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத்துவதுமான களப்பணியும் அது. ஆதித்த நல்லூரைப் பற்றி இன்று நாம் அறிவதற்கு முன் தடம் பதித்த சாத்தான்குளம் ராகவன் அவர்களின் படம் அந்த அரங்கில் இடம்பெற புகைப்படத்தினை என்னிடம் கேட்டார். அனுப்பினேன். அது ஒவியமாக அங்கு வைக்கப் பட்டுள்ளது. இதெல்லாம் இந்த ஓவியரால் எனக்கு கிடைத்த பெருமை.
ஓவியராக மட்டுமல்லாமல் நல்ல வெண்பா எழுதும் கவிஞராகவும் பொன் வள்ளி விளங்குகிறார். எழுத்தாளரும் கவிஞரும் ஆசிரி யருமான கிருஷி சார் அவர்களின் பணி நிறைவில் நல்லாசிரியர் என்று வாழ்த்தி இவர் வெண்பா அளிக்க அவர் ஓய்வு பெற்றாலும் நல்லாசிரியருக்குத் தகுதி உண்டு என அரசு விருதளித்ததை பொன் வள்ளியின் பொன்வாக்குப் பலிதம் என்றே கூறி கிருஷி சார் இப்போதும் மகிழ்வார்.
எழுதத்தொடங்கிய காலத்தில் திருநெல்வேலியில் என்னை யாரும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத போது (மதிக்காத போது என்று கூட எடுத்துக் கொள்ளலாம்) திருநெல் வேலி மித்ரா ஸ்டுடியோ மித்ரா வள்ளி மணாளன் அவர்களின் பொதிகைக் கவிஞர் மன்றம் எனக்கு விருதளித்த போது ‘பதிவுச் செம்மல்’ என்றளியுங்கள் எனக் கூறி முன்மொழிந்ததும் பொன் வள்ளி தான்.
இன்றைக்குப் பல உள்ளூர் வரலாற்று நிகழ்வுகளை தொடர்ந்து பதிவு செய்வதும் தமிழக அரசு தமிழ்ச் செம்மல் என்று விருது வழங்கியதும் அன்றே அவருக்குத் தெரிந்துவிட்டது போலும். பொன் வாக்கு என் வாழ்விலும் பலித்தது. நானே சாட்சி.
தாமிரபரணிக்கரையின் பெருமை கொள்ள வேண்டியதும் , பேணப்பட வேண்டியதுமான ஆளுமை நண்பர் பொன் வள்ளிநாயகம்.
தி.க.சி .அவர்கள் வீட்டிற்கு வந்த ஒரு பத்திரிக்கை ஆசிரியர் அவர்கள் வீட்டில் நான் வரைந்திருந்த தாடி மீசையுள்ள பாரதியினை விருப்பப் பட்டு கேட்டு வாங்கி (எடுத்துக் கொண்டு ) சென்று விட்டார் .
பின்னர் அவர் ஒரு நூல் வெளியிட்டு விழாவிற்காக அதே பாரதி படம் தேவை வரைந்து தர முடியுமா எனவும் கேட்டார்.
சென்னையிலும் வேறு சில பணிகள் இருந்ததால் வரைந்து எடுத்துக் கொண்டு சென்று விட்டேன்.
விழா மேடையில் ஓவியப்பரிசைக் கண்டதும் வியந்து மகிழ்ந்த சிறப்பு அழைப்பாளர் யார் வரைந்தது எனக் கேட்க , இங்கேதான் இருக்கிறார் என மேடையிலுள்ளோர் கூறவும் அவர் கையாலேயே வாங்கிக் கொள்கிறேன் எனப் பெற்றும் கொண்டார். படைப்பாளியின் கையாலாயே கலைப்படைப்பை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.
உடனே மேடையை விட்டு நகர முற்படுகையில் பாராட்டுச் சால்வை பெற என்னை இழுத்துப் பிடித்து நிறுத்தியவர் தினமணி பத்திரிக்கை ஆசிரியர்
கே.வைத்தியநாதன் என்று அவர் கூறும் போது நாம் சந்தோசமடைகிறோம்.
இவர் பிறந்தது 11. 01. 1972 அன்று வெள்ளங்குழித்தான் பிறந்த ஊர். இவர் தொடக்கப்பள்ளியை வீரவநல்லூர் கிளாக்குளம் டி.றி.டி.எ பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளி சேரன்மகாதேவி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். இவரது ஓவியர் ஆசிரியர்கள் முத்து சுப்பிரமணியன், சிவராமகிருஷ்ணன், உடையர்பட்டி இசக்கி அண்ணாச்சி ஆகியோர் ஆவர். இவரது தாய் தந்தையர் பெயர் நெ. பொன்னம்பலம், பொ. மரகதவேலாம்மாள். சகோதரர் பொ. நெல்லை நாயகம், மனைவி பாளையங்கோட்டை பெல் பள்ளியின் தலைமையாசிரியர் கி.கோமதி சங்கரி, மகள் வ.சிவ மரகதராஜம், பாளை தூய சவேரியார் கல்லூரி மூன்றாமாண்டு பி.எஸ்.சி மாணவி. இவரது சகோதரி இந்திரா கல்லிடைகுறிசியில் வசித்து வருகிறார். மற்றொரு தங்கை சீதா லெட்சுமி தச்சநல்லூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் பிரபல நெல்லை வானொலி நேயர் கடம்போடு வாழ்வு சி. நல்ல பெருமாள் என்பதும் மகிச்சிறப்பாகும். இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடன் நெல்லை வானொலி நேயராக இயங்கி வருகிறார் என்பது எனக்கு கூடுதல் பெருமையாகும்.
(நதி வற்றாமல் ஓடும்)