தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகன் ராமர்(30). இவர் ஆறாம்பண்ணையில் பைக் மெக்கானிக் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இன்று மதியம் ஆறாம்பண்ணையில் இருந்து தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக கருங்குளம் ஆற்றுப்பாலம் வழியாக சென்றுள்ளார். அப்போது எதிரே ஆடு ஏற்றி வந்த குட்டியானை வாகனம் இவரது பைக் மீது மோதியது. இதில் ராமர் தூக்கி வீசப்பட்டார். பாலத்தின் சுவற்றில் தலைமோதிய ராமர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இதனை பார்த்த வேன் ஓட்டுநர் வேனில் தப்பியோடினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் ராமரின் உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய குட்டியானை வாகனத்தின் டிரைவர் பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் வீரமணி(26) என்பவரை போலிசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமருடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். 4 அண்ணன், 2 அக்கா. இதில் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.



