தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ‘போதை மற்றும் காவல் நண்பன்” ஆகிய விழிப்புணர்வு குறும்படங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே கஞ்சா, மதுபானம் மற்றும் புகையிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “போதை” என்ற குறும்படமும் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் காவல்துறையினரின் காவல் செயலி போன்ற அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “காவல் நண்பன்” என்ற குறும்படம் வெளியீட்டு விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து நடைபெற்றது.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு குறும்படங்களை வெளியிட்டு பேசுகையில், மாணவ மாணவிகளாகிய உங்களுக்கு கல்வி தான் முக்கியமானதாக இருக்க வேண்டும். விளையாட்டில் எல்லைக்குட்பட்டு விதிமுறைகளை கடைபிடித்து விளையாடினால் வெற்றிபெற முடியுமோ அதேபோல் வாழ்க்கையிலும் நமக்கென்று எல்லைகளை வகுத்து சில விதிமுறைகளை கடைபிடித்து குறிக்கோள்களை அடைந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும். சமூகத்தில் உயரிய பதவியில் இருப்பவர்கள் பலர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். உங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை கெடுத்து கொள்ள வேண்டாம். போதைக்கு அடிமையாகாமல் தங்களை நல்ல செயல்களில் ஈடுபடுத்தி, சிறப்பாக கல்வி பயின்று சாதனையாளர்களாக வரவேண்டும் என்றார்.
இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரி நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ், காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், திரைப்பட துறை தயாரிப்பாளர் மற்றும் செயல் இயக்குநர் மதன், இயக்குநர் சாம்ராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


