மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு தோழப்பன்பண்ணை தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த பேரூர் பகுதியைச் சேர்ந்த கொம்பையா மகன் முத்துராமன் (வயது 26), தோழப்பன்பண்ணை கிழக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பூல்பாண்டி (26) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி ஆற்றுமணல் திருடியது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த 70 மூடை ஆற்று மணலையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி முத்துராமன் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், திருநெல்வேலி ஜங்ஷன் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன.


