தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக எட்டையாபுரம் சாலையில் இருந்து வரக்கூடிய மினி பஸ்கள், ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 4-ம் ரயில்வே கேட் மேம்பாலம் மேல் வழியாக செல்லாமல் சர்வீஸ் ரோடு வழியாக செல்ல மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார். புதிய பஸ் நிலைய வெளிப்பகுதிகளில் பஸ்களை நிறுத்தக்கூடாது என்றும் நகரின் முக்கிய சாலைகளில் பொது போக்கு வரத்துக்கு இடையூறாக வாகனங்களை சாலைகளில் நிறுத்தக்கூடாது என்றும் மேயர் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக கருத்த பாலம் பகுதியை மேயர் ஆய்வு செய்தார். அந்த பாலம் குறுகியதாக உள்ளதால் பாலத்தை அகல படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் பழைய மாநகராட்சி எதிர்புறம் நடைபெற்று வரும் புதிய வணிக வளாக கட்டுமான பணிகளையும் மேயர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மேயரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


