பத்மப்ரியா என்பவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். தெலுங்கில் இவரது முதல் படம் அடபில்லலா தன்றி (1974). கன்னடத்தில், இவர் பங்காரத குடி (1976) மூலம் அறிமுகமானார். இவர் 1970 களின் பிற்பகுதியில் பிரபலமான நடிகையாக இருந்தார். ஒரே ஆண்டில் (1978) – ஆபரேஷன் டயமண்ட் ராக்கெட், தாய்க்கே தக்க மகா, சங்கர் குரு ஆகிய மூன்று கன்னட வெற்றித் திரைப்படங்களில் புகழ்பெற்ற ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. இவர் நகைச்சுவைப் படமான நாரத விஜயா மற்றும் புதினத்தை அடிப்படையாகக் கொண்ட படாத ஹூ ஆகியவற்றில் அனந்த் நாக் ஜோடியாக நடித்தார். அந்த இரண்டு படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன. இவர் கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுடன் நான்கைந்து படங்களில் நடித்தார். ஸ்ரீநாத், அசோக், லோகேஷ் ஆகிய கன்னட நடிகர்களுடனும் நடித்தார்.
1974 மற்றும் 1981 க்கு இடையில் முன்னணி கதாநாயகியாக தமிழ் திரைப்படங்களில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்த இவர், வாழ்துங்கள், வைர நெஞ்சம், மோகனப் புன்னகை, வாழ்ந்து காட்டுகிறேன், குப்பத்து ராஜா, ஆயிரம் ஜென்மங்கள், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். வைர நெஞ்சம் மற்றும் மோகனப் புன்னகை ஆகிய படங்களில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார். எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு ஜோடியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் இளவரசி வேடத்தில் நடித்தார். [1] முதன்மையாக தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த இவர் கிட்டத்தட்ட 80 திரைப்படங்களில் நடித்துள்ளார்.


