
பேராசிரியர் தி.அ.சொ வின் சுருக்கமான வாழ்க்கை குறிப்பு
அன்றைய திருநெல்வேலி மாவட்டம் இன்றைய தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகில் உள்ள முள்ளிக்குளத்தில் சமூக சிந்தனையுள்ள பெருவிவசாயி திருநீலகண்ட கோனார் – முத்தம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1927ம் ஆண்டு சூலை மாதம் 15ம் தேதி பிறந்தவர் பேரா தி.அ.சொக்கலிங்கனார்.
இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அழகிய சொக்கலிங்க பாண்டியன்.
அதுவே சுருங்கி தி.அழகிய சொக்கலிங்கம் என பள்ளியில் சேருகையில் மாற, பின்பு அது தி.அ.சொக்கலிங்கம் என மாறியது. இதையே அவர் எனது பெயரில் தலையும் போச்சு வாலும் போச்சு என அடிக்கடி நகைசுவையாய் கூறுவார்.
துவக்க கல்வியை முள்ளிக்குளத்தில் முடித்த பின் திருநெல்வேலி இந்து கல்லூரி உயர்நிலை பள்ளியில் உயர்நிலை கல்வியையும் திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளங்கலை தமிழையும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை தமிழையும் (1952) முடித்தார். சென்னை பல்கலை கழகத்தில் தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையிடம் ஆராய்ச்சி மாணவனாய் சேர்ந்து ஊரும் பேரும் என்பது பற்றி எம்.லிட் பட்டமும் (1956) பெற்றார்.
இதன் பிறகு திருவனந்தபுரம் மகாராஜா கல்லூயில் (இன்றைய பல்கலை கழக கல்லூரி) தமிழ் துணை பேராசிரியராக (1955 – 1967) பணியாற்ற துவங்கினார்.
தொடர்ந்து அன்றைய திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் புதிதாக துவங்கப்பட்ட சட்டநாதகரையாளர் கல்லூயில் முதல் முதல்வராக (1967-1969) பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து 1969ல் மதுரையில் துவங்கப்பட்ட யாதவர் கல்லூரியின் நிறுவன முதல்வராக பணியாற்றினார்.
தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட கல்லூரி வளர்ச்சி குழுவின் முதல் புலமுதன்மையர்(டீன்)ஆக (1978-1986) பணியாற்றினார்.
1986ல் பணி ஓய்வு பெற்ற பின் அண்ணாமலை பல்கலை கழகம் அவரை தேர்வாணையராக நியமித்தது. 1990 ம் ஆண்டு வரை அங்கு பணிபுரிந்தார். அதன் பிறகு அண்ணாமலை பல்கலை கழகத்தின் செனட் உறுப்பினராக அன்றைய தமிழக ஆளுனரால் நேரடியாக நியமிக்கப்பட்டார்.
அங்கிருந்து ஓய்வு பெற்ற பின் யாதவர் மகாசபையின் தமிழ்நாடு மாநில தலைவராகி தமிழகம் முழுவதும் எல்லா யாதவ கிராமங்களுக்கும் சுற்றி திரிந்து மகாசபையை வலுவான அமைப்பாக மாற்றினார். சென்னையில் யாதவர் மாளிகையை உருவாக்கினார். இதற்கிடையே தான் நிறுவன முதல்வராக இருந்த மதுரை யாதவர் கல்லூரியின் தாளாளராகவும் ஆகி கிடைத்த பணியை சிறப்பாக செய்து கல்லூரியின் வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்தார்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவரான பேரா.தி.அ.சொ. அவர்கள் 1997 ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி இயற்கை எய்தினார்.
பேராசிரியர் தி.அ. சொக்கலிங்கனாரின் இலக்கிய பணிகள்:;
கனவும் நனவும், காப்பிய சிந்தனைகள், வீரத்தின் பன்மைத் தீர்ப்பான், நாடறிந்தகதை, விசிறிமடிப்பு, நாராயண குருவின் வாழ்வும் வாக்கும், ஐந்தருவி, இந்திரிஜித், பெரும்புள்ளிகள் என இவை எல்லாம் இந்த அறிவு மரத்தில் கிடைத்த மலர்கள்,கனிகள்,விதைகள். இவரின் பல நூல்கள் பல்வேறு தமிழக பல்கலை கழகங்களில் பாடமாக கொண்டுவரப்பட்டன. ஆனந்த விகடன், வஞ்சிநாடு, வசந்தம், தமிழ்நாடு போன்ற இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.
– நீலகண்டன் சொக்கலிங்கம்