தூத்துக்குடி சிவன் கோவிலில் சேதம் அடைந்துள்ள ராஜகோபுரம் சிற்பக் கூரையை சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையரிடம் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், “தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலின் வாயிலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோபுரத்தின் இரண்டாம் வாயிலில் அமைந்துள்ள சிற்பக் கூரை மிகவும் பழுதடைந்து பக்தர்கள் யார் மீதும் விழுந்து விபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.
கும்பாபிஷேகம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் நகரின் முக்கிய கோவிலின் ராஜகோபுரம் இவ்வாறு சேதமடைந்திருப்பது பக்தர்கள் மத்தியிலும் ஆன்மீக அன்பர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாயிலின் முன்புதான் நாள்தோறும் தரிசனத்திற்காக வரக்கூடிய பொதுமக்கள் தங்கள் காலனிகளை கழட்டிச் செல்கின்றனர். மேலும் சிலர் அவ்விடத்திலேயே இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த கோபுரத்தின் சிற்பக்கூரை யார் மீதும் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இதனை சரி செய்து தருமாறும் மேலும் திருக்கோவிலின் கோபுரம் மற்றும் சுற்றுப்புறங்களில் இதுபோன்று ஏதேனும் பழுதடைந்த சுவர்கள் இருப்பின் அதனை இந்து சமய அறநிலைத்துறையின் நிதியை ஒதுக்கி சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்து முன்னணி மாநகர மாவட்ட செயலாளர் சரவணகுமார், கோவில் இறை பக்தர்கள் கணேசன், பிஜேபி கிளை தலைவர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


