தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 12 நாட்களுக்கு பின்னர் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தென்மேற்கு வங்கக் கடல் மன்னாா் வளைகுடா பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை சுழற்காற்று வீசக்கூடும் எனவும், பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, உள்ள நாட்டுப்படகு, விசைப்படகு மீனவா்கள் மறு அறிவிப்புவரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத் துறை தடை விதித்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரையிலான 20-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், விசைப்படகுகள், பைபா் படகுகள் கடந்த 16ஆம் தேதிமுதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், இன்று (டிச. 27) புதன்கிழமை மீனவா்கள் வழக்கம்போல் கடலுக்குச் செல்லலாம் என, மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 5 மணிக்கு 184 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இதுபோல் வைப்பார், தாளமுத்து நகர், திரேஸ்புரம், இனிகோ நகர், திருச்செந்தூர், வீரபாண்டியபட்டினம், பெரியதாழை ஆகிய பகுதிகளில் இருந்தும் பைபர் படகு, நாட்டுப் படகு, கட்டு மரங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.


