சாத்தான்குளம் அருகே மின் கம்பத்தில் மோட்டார் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குமார் (29). தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து அம்பலச்சேரி வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கட்டாரிமங்கலம் வளைவு பகுதியில் சென்றபோது மோட்டார் ைசக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அவரை கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


