சங்க காலத்துக்கு முன்னரே பனையிலிருந்து பதனீர் இறக்கியுள்ளனர் – பயினி என அதற்குப் பெயர் இருந்துள்ளது. அதிலிருந்து கருப்பட்டிப் போன்றவை தயாரிக்கப்பட்டன. பனையேறும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருந்தது. பதனீரிலிருந்து கள்ளும் தயாரிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் மனிதர்கள் தானிய வகைகளையும் கைக்கு எட்டிய காய் – பழங்களையும், கிழங்கு வகைகளையும் நேரடியாகவும் சமைத்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உயரத்தில் ஒரு பனைமரம் பூக்கிறது – காய்க்கிறது – பழமாகிக் கீழே விழுகிறது, சில பனை மரங்கள் பூக்கின்றன – தேனீக்களும் வண்டுகளும் அதனை உண்டு மகிழ்கின்றன. இன்று பனை ஏறுவோரின் முப்பாட்டன் – தமிழன் இவற்றைக் கவனித்தான், மேலே ஏறிப் பார்க்கிறான், இந்தப் பனையின் பூக்களை – அதாவது பாளைகளை வாள் கொண்டு அரிந்து விட்டபோது சொட்டுச் சொட்டாகப் பதனீர் வருவதைக் கண்டான். குடித்துப் பார்த்தால் சுவையாக இருந்தது. அதனைக் கலயத்தில் சேமித்தான். காய்ச்சிப் பார்த்தால் கருப்பட்டிக் கிடைத்தது. அது இனிப்பாக இருந்தது. எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ந்தான்.
அதே பதனீரை இறக்குவதற்க்குத் தாமதமானால் சளித்துப் போனது. அதில் கருப்பட்டி எதுவும் கிடைக்கவில்லை. எனவே, சற்று சுண்ணாம்புத் தூளைத் தூவினான், 24 மணி நேரம் நல்ல நிலையில் இருந்தது. சளித்துப்போன பதனீரை கள் எனச் சிலர் குடித்து மகிழ்ந்தனர். பனையில் பாதுகாப்பாக ஏற, தேவையான தலைநார், முருக்குத்தட்டி – பாளையைப் பதப்படுத்த கடுப்பு – மென்மையாகச் சீவ கூரான அரிவாள் – பதனீரை கீழே கொண்டுவர குடுவை என கருவிகளைச் செய்தான். இப்படியாக, விஞ்ஞானத் தொழில் நுட்பத்தை வேளாண்மையில் முதன்முதல் செயல்படுத்திய அறிவாளிகள் இந்தப் பனையேறும் தொழிலாளர்களே.
தமிழ் மூவேந்தர்கள் காலத்தில் இவர்களது வாழ்வு சிறப்பாக இருந்தது. பதனீரையும் கள்ளையும் அரசர், புலவர் முதல் மக்களும் பயன்படுத்தினர். “தமிழ்நாட்டில் பனைமரத்திலிருந்து ஒரு பானம் எடுக்கிறார்கள், அது ஒயினை விடச் சிறப்பாக இருந்தது, ஐரோப்பிய மதுவகைகள் அங்கே தடை செய்யப்பட்டிருந்தன ” என மார்க்கோபோலோ எனும் கிரேக்கப் பயணி எழுதியுள்ளார் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு).
காலம் மாறியது. ஆரியர்கள், டில்லி சுல்தான்கள், விசயநகர நாயக்கர்கள், நவாபுகள், ஆஙகிலேயர்கள் என பல அன்னியர்கள் கையில் தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரம் போனது. மூவேந்தர்களின் முன்னணிப் படையிலிருந்த சான்றார்களுக்கு அரசு அந்நியமானது. தங்கள் உறவுகள் செய்த பனைத் தொழிலில் இணைந்தனர். அரசியல் காரணங்களுக்காக பனைத் தொழிலாளர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால் செய்தத் தொழிலால் பிரித்துப் பார்க்கப்பட்டவர்கள் பனைத் தொழிலாளர்கள். உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் என்றார் காரல் மார்க்சு ஆனால், மார்கசியம் பேசியவர்களும் இவர்களுக்காகப் பேச மறந்தார்கள். Work is Worship என ஆங்கிலேயர் சொல்கிறார்கள், ஆனால் இந்தியாவுக்கு வந்த ஆஙகிலேயர்கள் கீழ்த்தரமாக பதிவு செய்த ஒரு தொழில் உண்டென்றால் அது பனையேறும் தொழில்தான்.
மழை பெய்யும் நாட்களில் மீன் பிடிக்கச் செல்லமுடியாது. அந்நாட்களில் மீனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்கிறது. மழை பெய்தால் பனை ஏற முடியாது; அவர்களது வாழ்வாதாரம் கெட்டுவிடுகிறது; இத்தொழிலாளர்களுக்கு அரசு உதவி எதுவும் செய்வதில்லை.
நெசவுத் தொழிலாளர்களுக்கு, பீடித்தொழிலாளர்களுக்கு, மீன்பிடித் தொழிலாளர்களுக்கு எல்லாம் அரசு மானியத்துடனும் இலவசமாகவும் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் உள்ளது. ஆனால் பனையேறும் தொழிலாளர்களை அத்தகயத் திட்டங்கள் எட்டிப் பார்ப்பது இல்லை.
1963 முதல் 1968 வரை இந்திய அரசு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. அதன்படி தங்கத்தை மொத்தமாக வைத்திருப்பதும் 14 காரட் தரத்துக்கு மேல் நகை செய்வதும் தடை செய்யப்பட்டன. இதனால் தங்கநகை செய்யும் சிலர் வேலை இழந்தனர். இந்த நகைத் தொழிலாளர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் கல்வியிலும் வேலைகளிலும் தனி இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. 1900 முதல் ஆங்கிலேய அரசு கள்ளுக்கடைகளை நடத்தியது, பதனீரை கள்ளுக்கடைகளுக்குக் விற்க பனையேறும் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப் பட்டார்கள். அவர்கள் கருப்பட்டி தயாரித்து விற்ற தொழில கெட்டுப் போனது. போதைக்காக கள்ளுடன் பல வேதிப் பொருட்களைக் கலந்து பாரம்பரியமாகத் தயாரிக்கப்பட்ட கள்ளுக்குக் கெட்டப்பெரை உண்டாக்கினார்கள். 1937 முதல் கள்ளுக்கடைகளை சென்னை மாகாண அரசு மூடியது. அடுத்து 1972இல் திறந்து, 73இல் மூடப்பட்டது. மீண்டும் திறந்து 1977ஆம் ஆண்டு முதல் கள்ளுக்கடைகள் மூடப்பட்டன. இபோதெல்லாம் கள்ளுக்கடைகளுக்கு பதனீர் கொடுத்து தங்கள் கருப்பட்டித் தொழிலை இழந்த தொழிலாளர்கள் நிலை என்ன என்பது பற்றி அரசும் தொழிற்சங்கங்களும் கவலை கொள்ளவில்லை.
நாட்டில் நூல் நூற்றல், துணி நெய்தல். மீன்பிடித்தல் என எல்லாத் தொழில்களும் எந்திரமய மாக்கப்பட்டுவிட்டன. சாக்கடையில் அடைப்பெடுக்க, சாலை போட, கட்டடம் கட்ட என எல்லாவற்றுக்கும் எந்திரம் வந்துவிட்டது. ஆனால் பனை ஏற மட்டும் ஒரு எந்திரம் இல்லை. இதுபற்றி, இடதுசாரிச் சிந்தனையாளர்கள் முதல் அரசு, நீதிமன்றம் என எவரும் வாய் திறப்பதில்லை.
பதநீர் உடலுக்கு நல்லது, பனங்கற்கண்டும் கருப்பட்டியும் பல நோய்களைத் தடுக்கும் எனும் பேச்சுகளுக்கு மட்டும் குறைவில்லை. பனையேற ஒருவர் தன் உடலையும் குடும்பத்தையும் பலி கொடுத்தால்தானே இவை கிடைக்கும்.
பனை மரங்கள் புயலைத் தாங்கும் வலு கொண்டவை, ஏரி – குளக்கரைகளைப் பாதுகாக்கின்றன என்பதால் பனைமரம் நடுவதற்கு மூன்று கோடி ரூபாயை ஆட்சியாளர்கள் ஒதுக்கினர்.
ஆனால், பனைமரம் ஏறும் எந்திரம் கண்டுபிடிக்க ஒரு ஆராய்ச்சி நிலையம் நிறுவும் எண்ணம் வரவில்லை.


