திருமண்டல தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக ஆயரைக் கண்டித்து நாசரேத் தூய யோவான் பேராலய சபை உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் தலைமை பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலய ஆயர் அண்ட்ரூ விக்டர் ஞான ஒளி திருமண்டல தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாககூறி சபை மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்வின் தலைமை வகித்தார். நாசரேத் சேகர செயலாளர் எலியேசர், பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ், சாத்தான்குளம் காந்திராஜன், ஒய்யான்குடி மோசஸ் கிருபைராஜ், சிசில் இன்பராஜன், தம்பு என்ற அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டம் குறித்து சேகரமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள எபினேசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தேர்தல் கால அட்டவணைப்படி முதல் கட்டமாக ஆக. 16 ஆம் தேதி சபை மன்ற பிரதிநிதிகள், திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் இருந்து 21 சபை பிரதிநிதிகளும், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் 6 பேர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்.இதில் டி.எஸ்.எப்.அணி சார்பில் 13 சபை பிரதிநிதிக ளும், 3 பெருமன்ற உறுப்பினர்களும், எஸ்.டி.கே. அணி சார்பில் 8 சபை பிரதிநிதி களும்,3 பெருமன்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது கட்ட மாக சுயநிதி பாடப்பிரிவுகளில் நடைபெறும் கல்லூரிகளில் இருந்து சபை பிரதிநிதி களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆக.21ஆம்தேதி நடைபெறுமென அறிவிக்கப் பட்டிருந்தது.ஆனால் எஸ்.டி.கே.அணியினர் தோற்று விடுமோ என்ற அச்சத்தில் எந்த வித முன்னறிவிப்பின்றி தேர்தலை நிறுத்தி விட்டனர். ஆனால் ஆக.28 ஆம் தேதி சனிக்கிழமையன்று சேகர கமிட்டியை அமைப்பதற்கான மூன்றாம் கட்ட தேர்தலை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இரண்டாம்கட்ட தேர்தலை நடத்தாமல் மூன்றாம் கட்ட தேர்தலை நடத்த ஆயர் அண்ட்ரூ விக்டர் ஞானஒளி திட்டமிட்டு செயல்பட்டு வருவதைக் கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
எங்களது கோரிக் கையை மாவட்ட ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் கொடுத்ததின் பேரில் ஆக.27 வருவாய் கோட்டாட்சியர் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசி திருமண்டல பேராயருக்கு இரண்டாம் கட்ட தேர்தலை நடத்திவிட்டு மூன்றாம் கட்ட தேர்தலை நடத்த அறிவுரை வழங்கினார். ஆனால் அதையும்மீறி நாசரேத் தூயயோவான் பேராலய தலைமை ஆயர் அண்ட்ரூ விக்டர் ஞான ஒளி செயல்பட்டு வருவதைக் கண்டித்தும் ,இரண்டாம் கட்ட தேர்தலை நடத்தாமல் மூன்றாம் கட்ட தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.
டி.எஸ்.எப். அணி லே செயலாளர் வேட்பாளர் டி.கிப்ட்சன், மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோர் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு போராட்டம் வெற்றி பெற வாழ்த்தினர். போராட்டத்தில் சாம்சன் மோசஸ், சிலாக்கியமணி, நசரேயன், பாஸ்கர், ஜேம்ஸ், முன்னாள் சேகர செயலாளர் ஆனந்தராஜ், துரை, ஹேன்ஸ், சாமுவேல், அகஸ்டின், இம்மானுவேல், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.