புதூரில் பயறு உற்பத்தியாளர் கம்பெனியில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவுப்பொருட்கள் அடங்கிய பல்பொருள் அங்காடியினை ஆட்சியர் கி.செந்தில்ராஜ், திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் அரசு நிதியுடன் இயங்கிவரும் புதூர் பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவுப்பொருட்கள் அடங்கிய மருதம் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் முன்னிலையில் இன்று திறந்து வைத்து பார்வையிட்டு, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டிலேயே எந்த ஒரு இடத்திலும் இல்லாத தனித்துவம் வாய்ந்த நிறுவனமாக இந்த பயறு உற்பத்தியாளர் கம்பெனியை நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகச்சிறந்த உற்பத்தியாளர் நிறுவனமாக இந்த புதூர் பயறு உற்பத்தியாளர் நிறுவனத்தை உயர்த்தியுள்ளீர்கள். கூட்டுறவே நாட்டுறவு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. 1500 விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒரு நிறுவனத்தை நடத்துவது சாதாரண விஷயமல்ல. ஆனால் நீங்கள் ஒருங்கிணைந்து அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது கூட்டு முயற்சிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் விவசாயிகளாகிய உங்களின் இடுபொருட்களை நீங்களே உங்கள் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்து கொள்கிறீர்கள். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள். மேலும், ஆடுகளை வளர்த்து அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கும் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக நீங்கள் வருங்காலத்தில் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் துணையாக இருக்கும். உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பொறுத்தே தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று இதுபோன்று நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்து அவர்களை ஊக்குவிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம்.
இந்த நிறுவனம் மூலம் 2021-22ம் ஆண்டில் ரூ.4 கோடிக்கு விற்றுமுதல் (TURN OVER) ஈட்டியிருக்கிறீர்கள். 2022-23ம் ஆண்டில் ரூ.11 கோடி விற்றுமுதல் (TURN OVER) ஈட்டியிருக்கிறீர்கள். 2023-24ம் ஆண்டிற்கு ரூ.22 கோடி விற்றுமுதல் (TURN OVER) இலக்கு வைத்துள்ளீர்கள். புதூரில் மட்டும் ஆரம்பித்த இந்த மருதம் பல்பொருள் அங்காடி எட்டயபுரம், விளாத்திகுளம், தூத்துக்குடி போன்ற இடங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் வளர்ச்சியடைய வேண்டும்.
இன்னும் 5 வருடத்தில் ரூ.100 கோடி விற்று முதலை (TURN OVER) இலக்காகக்கொண்டு இந்த நிறுவனம் வளர வேண்டும். இப்போது 11 நபர்கள் வேலை பார்க்கும் இந்த நிறுவனத்தில் 100 பேர் வேலை பார்க்கும் அளவுக்கு வளர வேண்டும். நகரங்களில் இருப்பதுபோல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதாவது கணினி மயமாக்கப்பட்ட, குளுரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய நிறுவனத்தை அமைத்துள்ளீர்கள். இந்த பயிர் உற்பத்தியாளர் நிறுவனம் இன்னும் வளர வேண்டும். பல்வேறு இடங்களில் இதுபோன்ற நிறுவனங்களை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் புதூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள பருத்தியிலிருந்து பஞ்சினைப் பிரித்தெடுக்கும் அலகு மற்றும் 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பருத்தியிலிருந்து பஞ்சினைப் பிரித்தெடுக்கும் முறை குறித்து கேட்டறிந்தார்கள்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) முருகப்பன், செயலர் (விற்பனைக்குழு, திருநெல்வேலி) எழில், புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் வனிதா, பயறு உற்பத்தியாளர் கம்பெனியின் முதன்மை செயல் அலுவலர் பவித்ரா, பயறு உற்பத்தியாளர் கம்பெனியின் இயக்குநர்கள் தர்மலிங்கம், தமிழரசி, அரசு அலுவலர்கள், உற்பத்தியாளர் கம்பெனியின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


