தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-யை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (25.07.2023) ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில், 2024 – பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்கள் (VVPATs) ஆகியவற்றினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ் எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது 4-7-2023 காலை 9.00 மணி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேற்படி முதல் நிலை சரிப்பார்ப்பு பணியானது வரும் 28-7-2023 அன்றுடன் முடிவடையும் நிலையில் உள்ளதால், அதை தொடர்ந்து, வரும் 29-7-2023 அன்று காலை 9.30 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவானது(Mock Poll), தேர்ந்தெடுக்கப்படும் 5% எந்திரங்களில், 1% எந்திரங்களில் 1200 வாக்குகளும், 2% எந்திரங்களில் 1000 வாக்குகளும், 2% எந்திரங்களில் 500 வாக்குகளும் நடைபெற உள்ளது.
இப்பணிமுடிவடைந்த பின்பு, முதல் நிலை சரிப்பார்ப்பு பணியில் சரி வர செயல்படும் எந்திரங்கள்(FLC OK units) அடங்கிய வாக்கு பதிவு எந்திரங்கள் வைத்துள்ள பாதுகாப்பு அறையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர்களால் சீலிடப்பட உள்ளது. அதன் பின்பு முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிவடைந்த 7 நாட்களுக்குள் முதல்நிலை சரிபார்ப்பு எந்திரங்களில் பழுதடைந்த எந்திரங்கள்(FLC Rejected Units); பெங்களுருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (BEL) நிறுவனத்திற்கு காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது என்றார்.
ஆய்வின்போது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) காமாட்சி கணேசன், தேர்தல் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, தனி வட்டாட்சியர் (சிப்காட்) சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ரவி (தி.மு.க.), ஆக்னல் பீரிஸ் (தி.மு.க.), சந்தானம் (அ.இ.அ.தி.மு.க.), சித்திரை (காங்கிரஸ்), சிவராமன் (பா.ஜ.க.), டி.ராஜா(சி.பி.ஐ.சி.எம்) மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


