முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடியில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கால்நடைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கால்நடை பராமரிப்பத்துறை மண்டல இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். செக்காரக்குடி பகுதியில் அதிகமாக விவசாயப்பணிகள் மேற்கொண்டவர்களுக்கும், பால்பண்ணையில் அதிகமாக பால் ஊற்றியவர்களுக்கும் சிறப்பு பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட சேர்மன் பிரம்மசக்தி, கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவர் ராமலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் தமிழகம் முழுவதிலும் 100 இடங்களில் இந்த கால்நடை மருத்துவமுகாம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார். கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை படிப்பிற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் தூத்துக்குடியில் ஜல்லிகட்டு நடத்துவது குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


