தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் ஆறாம் திருநாளை முன்னிட்டு, இன்று இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தனர்.
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஆறாம் நாளான இன்று இரவு, அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான யானை வாகனத்தில் சுவாமி சங்கர ராமேஸ்வரரும், எழில்மிகு அன்ன வாகனத்தில் அம்பாள் பாகம்பிரியாளும் எழுந்தருளினர்.
முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்குப் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும் அம்பாளும் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தனர். திராளன பக்தர்கள், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


