‘அத்ரி மலை யாத்திரை’ என்னும் தொடர், நான் ‘தினகரன் ஆன்மிக மலரில்’ எழுதிய தொடராகும். இத்தொடரில் அத்ரிமலை, தோரணமலை, குற்றாலமலைப் பயணம் குறித்து எழுதியிருந்தேன். இத்தொடரைத் தினகரனின் ‘சூரியன் பதிப்பகம்’ நூலாக வெளியிட்டிருந்தது. ‘சக்தி விகடன்’ இதழில் நான் எழுதிய அத்ரி மலைக் கட்டுரையைச் சிறு இணைப்பாக வெளியிட்டிருந்தார்கள். அக்கட்டுரையை, இந்தியா முழுவதும் நான் சென்று தரிசித்த ‘அருள் தரும் அபூர்வ ஆலயங்கள்’ குறித்த எனது 204 கோயில் கட்டுரைகளிலும் எழுதியிருந்தேன்.
ஒரு காலத்தில் உற்சாகத்தோடு மலை ஏறித் தொடர் எழுதி வந்த நான், இதய நோயால் பாதிக்கப்பட்டு இதயத்தில் ‘ஸ்டெண்ட்’ வைக்கப்பட்ட காரணத்தினால், கடந்த நான்கு ஆண்டுகளாக மலை ஏற்றத்தைத் தவிர்த்து வந்தேன். ஆனாலும், எனக்கு நக்கீரனின் ‘ஓம் சரவண பவா’ மாத இதழில் “சித்தர்களின் தரிசனத்திற்காக மலைப் பயணம்” என்ற தலைப்பில் தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தது; அதைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
இந்த நிலையில், ஏப்ரல் 30-ஆம் தேதி அத்ரி மலை கோரக்கநாதர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. “அதுமட்டுமல்லாமல், அங்கே ஒரு குறிப்பிட்ட மரத்தில் பன்னீர் மழை பொழிகிறது, கண்டிப்பாக வாருங்கள்” என கண்மணி அய்யா என்னை அழைத்தார். எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும், “உமது இதய நோயை அத்ரி மகரிஷி பார்த்துக் கொள்வார், கிளம்புங்கள்” என்று அவர் ஊக்கமளித்து வரவேற்றார்.
சரி, கும்பாபிஷேகத்திற்குப் போய்க்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். ஆனால் திடீரென்று எனது சிஷ்யன் காமராசு செல்வன், “தேர்தல், கும்பாபிஷேகம், மருத்துவமனை என ஓய்வில்லாமல் அலைந்துவிட்டோம்; கொஞ்சம் மாற்றத்திற்காக இப்போதே அத்ரிமலை போவோமா?” என்றான். “சரி, நீ போய்விட்டு வா” என்றேன். ஆனால் அவனோ, “நீங்கள் வந்தால் தான் நான் வருவேன்” எனக் கூறினான். முதலில் தயங்கினாலும், சிஷ்யன் மற்றும் கண்மணி அய்யா கொடுத்த உற்சாகத்தால் மலை ஏறத் தயாராகிவிட்டேன். என்னோடு தம்பி ஹரியும், நண்பர் சங்கரபாண்டியனும் கிளம்ப, 24.04.2026 அன்று அதிகாலை 6 மணிக்குப் பயணத்தைத் தொடங்கினோம்.
சரியாக 8 மணிக்குப் பாபநாசம் கடனா நதியில் நின்றோம். வனத்துறையிடம் அடையாளச் சான்று கொடுத்துப் பதிவு செய்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். இப்போது கும்பாபிஷேகப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காகத் தற்காலிகச் சாலை அமைத்திருந்தார்கள். எனவே, எனக்குச் செங்குத்தான ஏற்றம் ஏதும் இல்லை. ஏற்றம் வந்த இடங்களில் சிஷ்யன் என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான். கல்லாற்றில் இதமாகக் குளியல் போட்டோம். அதன் பிறகு அத்ரி மலை உச்சியை அடைந்தோம். அங்கே அத்ரி மகரிஷி தனது சிஷ்யருக்காக உருவாக்கிய கங்கையில் நீராடிவிட்டு, அத்ரி பரமேஸ்வரரை வணங்கி நின்றோம். அவரை வணங்கும் போதே, குறிப்பிட்ட மரத்திலிருந்து பன்னீர் மழை பொழியும் அதிசய இடத்திலும் நின்றோம்.
அத்ரி மகரிஷியின் அருள் மழையில் நின்றுகொண்டே அவரது தீபாராதனையைக் கண்டது, வாழ்வில் எல்லாப் பேறுகளும் கிடைத்தது போலவே இருந்தது. “இதற்காகத்தானே இறைவா என்னை இங்கு அழைத்து வந்தாயோ!” என அவரிடம் மனமுருக நன்றி தெரிவித்துக்கொண்டேன்.
அதன் பின் கண்மணி அய்யா அத்ரி தவம் இருந்த இடத்தில் பூஜை செய்துவிட்டு, அங்கே அன்னதானம் சாப்பிட்டோம். நடராஜன் அய்யா தனது தோட்டத்தில் இயற்கையாக விளைந்த காய்கறிகளைக் கொண்டு அந்த அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவ்விடத்தில் அத்ரி பிரசாதமாக அதனை உண்டுவிட்டுப் பின் கீழே இறங்கினோம். வரும் வழியில் கோரக்கர் குகையில் தரிசனம் செய்துவிட்டு அவர் அருளோடு அடிவாரத்தை அடைந்தோம்.
மீண்டும் என்னை மலை ஏற்றம் செய்ய வைத்த அத்ரி மகரிஷிக்கும், என்னை ஒரு பாரமாக நினைக்காமல் சுமந்து சென்ற சிஷ்யன் காமராசு செல்வனுக்கும், ஆதரவுக் கரம் நீட்டிய கண்மணி அய்யாவுக்கும், உடன் வந்த தம்பி ஹரி மற்றும் நண்பர் சங்கரபாண்டியனுக்கும் நன்றிகள்.
மலையில் எனக்குக் கிடைத்த புதிய நண்பர்கள் சங்கரபாண்டியன், பாலசுப்பிரமணியன் மற்றும் எனது அன்பு நண்பர் களக்காடு பத்திரிகையாளர் முருகன் அவர்களின் குடும்பத்தாருக்கும், என்னை அடையாளம் கண்டு வரவேற்ற வனத்துறையினருக்கும், அறநிலையத் துறையைச் சேர்ந்த நிர்வாக அதிகாரி கேசவன் அய்யா உட்பட அனைவருக்கும் நன்றி.
30-ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கு வாருங்கள், தரிசனம் செய்யுங்கள். நெகிழி (பிளாஸ்டிக்) போன்ற பொருட்களைக் கொண்டு வராதீர்கள். வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம். சத்தம் போடாமல், விலங்குகளைப் பயமுறுத்தாமல் அத்ரி அருளுடன் கீழே இறங்குங்கள். அத்ரி மலைக்குத் தற்காலிகமாகப் போடப்பட்ட சாலை ஓரளவுக்குச் சீராக உள்ளது. எனவே, முதியவர்கள் கூடத் தைரியமாக ஏறலாம். இது அத்ரி மகரிஷி நமக்குத் தந்த அரிய வாய்ப்பு, எனவே அனைவரும் பயன்படுத்துங்கள்.
மிக்க நன்றி.


