உயிரை பணயம் வைத்து கனிம கொள்ளையைத் தடுக்க போராடும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணல் கொள்ளையைத் தடுத்த, தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், உயிரை பணயம் வைத்து கனிம கொள்ளையைத் தடுக்க போராடும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் வழியாக தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள மனுவில், “தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவர்கள், இவர் கடந்த 25-04-2013 செவ்வாய் மதியம் 12.30 மணியளவில் தனது அலுவலகத்தில் இருந்த போது, விஏஓ அலுவலகத்துக்குள் புகுந்த மணல் (கனிம) கொள்ளையர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்த நிலையில் 2 நபர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பிற்பகல் 2.40 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
சமூக சொத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை கொண்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் துணிச்சலும், நேர்மையும் கொண்ட அரசு அலுவலரில் ஒருவராவர் இதற்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்கள், திருவைகுண்டம் வட்டம் ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அங்கு அருங்காட்சியம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்ததை கண்டறிந்து துணிச்சலாக அவைகளை அகற்றி இடத்தை மீட்டு கொடுத்துள்ளார்.
அப்போதும் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றார்கள். இது தொடர்பாக காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்து அந்த நபர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள். அத்தகைய நேர்மையான அலுவலர் தற்போது மணல் கொள்ளையர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கனிம வள கொள்ளையை சட்டப்படி தடுக்கும், நேர்மையான அதிகாரிகளும், சமூக செயல்பாட்டாளர்களும், பத்திரிக்கையாளர்களும் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் இது முதல் முறை அல்ல. கடந்த 2018-ல் அதிமுக ஆட்சியில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி நம்பியாற்றில் மணல் கொள்ளையை தடுத்த, காவல் உதவி ஆய்வாளர் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
2020-ல், சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரியை பார்வையிட சென்ற கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அவர்கள், கல்குவாரி ஒப்பந்ததாரர்களால் சிறை வைக்கப்பட்டார். கரூர் மாவட்ட மொத்த காவல்துறையும் சென்றுதான் கரூர் மாவட்ட வருவாய் அலுவலரை மீட்டு வந்தது. 2016, கரூர் கடம்பங்குறிச்சியில் மணல்குவாரிகள் சட்டவிரோதமாக இயங்கி வந்ததை நேரில் பார்வையிட்ட அய்யா பழ.நெடுமாறன், தோழர்.சி.மகேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் முன்பாகவே, மணல் கொள்ளையை எதிர்த்து ஓராண்டு காலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை திரட்டி வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெடுத்து வந்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க தோழர்கள் மீது மணல் மாஃபியாக்கள் அடியாட்கள் தாக்கியதில் 6-க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி கொடூர காயங்கள் ஏற்பட்டது. .ஆனால் அன்றைய காவல்துறையால் வழக்கு கூட பதிவு செய்யப்பட்டவில்லை.
2016 – நவம்பர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தாங்கள் இதை தெரிவித்தும், மணல் கொள்ளையை எதிர்த்து தங்கள் தலைமையில் போராட்டம் நடக்கும் எனக் கூறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டீர்கள்.(இணைப்பு -1.பத்திரிக்கை செய்தி) கரூர் வாங்கலில் 2016- டிசம்பரில் மணல்குவாரி அமைப்பதை எதிர்த்ததற்காகவே, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் அவர்கள் காரில் வரும்போது மணல் கொள்ளையர்களால் சுற்றி வளைத்து கொடூராமாக தாக்கப்பட்டார்.
சட்ட விரோத மணல் கொள்ளையை எதிர்த்ததற்காகவே, கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத் தோழர்கள்: மீது மணல் கொள்ளையன் சேகர் ரெட்டி அடியாட்களால் பலமுறை தாக்கப்பட்டும், பல்வேறு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டும், தேச துரோக வழக்கு உள்ளிட்ட 10-கும் பல்வேறு பொய் வழக்கு போடப்பட்டு சிறை உள்ளிட்ட அடக்குமுறைக்கு உள்ளாகினர். இதனையும், மணல் கொள்ளையை எதற்கு போராடியதற்காகவே முகிலன் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளை பற்றியும் தாங்கள் 28-02-2021 அன்று பங்கேற்ற கரூர் சட்டமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தீர்கள்.
கடந்த ஆறு மாதம் முன்பு 10-09-2022-ல், 7 ஆண்டுகளாக அனுமதி இல்லாமல் செயல்பட்ட சட்ட விரோத கல் குவாரியை மூட வைத்ததற்காகவே, சட்ட விரோத கல் குவாரி உரிமையாளர்களால் கரூர் விவசாயியும், திமுக கிளைச் செயலாளரருமான ஜெகநாதன் படுகொலை செய்யப்பட்டார். கடந்த மே-2022ல், 200க்கும் மேற்பட்ட மனுக்களை ஆதாரத்துடன் கொடுத்ததற்காகவே சமூக ஆர்வலர் சென்னிமலை தமிழ்ச்செல்வனைசட்டவிரோத கல்குவாரி உரிமையாளர்களால் ஏவி விடப்பட்ட கூலிப்படையால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளானார்.
கடந்த ஆண்டு (ஜனவரி- 2022) யானை வழித்தடத்தை அழித்து சட்ட விரோத செம்மண் கொள்ளையை ஆவணப்படுத்திய, 17 வயது கோவை -தடாகம் பள்ளி மாணவி சாந்தலா, செங்கல் சூளை அதிபர்களால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். டிசம்பர்-2022ல், நில உச்சவரம்பு நிலங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததை தடுத்து நிறுத்தியதற்காகவே காரின் மீது லாரி ஏற்றி கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளானார், திருப்பூர் மாவட்ட சமூக ஆர்வலர் நத்தக்காடையூர் செந்தில்குமார்.
கல்குவாரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததற்காகவே, கடந்த (மார்ச்-2023) மாதம் நியூஸ் தமிழ் செய்தியாளர் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு 10 முத்தூரில் தாக்குதலுக்கு உள்ளாகினார். ஏற்கனவே கடந்த ஆண்டு குமரி மாவட்டத்திலும் கல்குவாரி முறைகேட்டை வீடியோ எடுத்த நியூஸ் தமிழ் செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளாகினார். கடந்த மாதம் 10-03-2023 கோடங்கிபாளையம் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பாகவே கல்குவாரி உரிமையாளர்கள், அவர்களது அடியாட்கள் மிகப்பெரும் ரகளையில் ஈடுபட்டு கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு போடப் பட்டது.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு உண்மைகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதற்காகவே, சமூக செயல்பாட்டாளர்கள் மீது, கோவை – 10 முத்தூர், கரூர் – காட்டுமுன்னூர், நாமக்கல் – மரப்பரை, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடந்த கருத்து கேட்பு கூட்டங்களில் நேரடியாகவே மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்பே கல்குவாரி உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழ்நாடு முழுக்க சட்டவிரோத கனிமக் கொள்ளையை தடுக்கும் சமூக செயல்பாட்டாளர்கள் மீது குவாரி உரிமையாளர்கள் பல்வேறு பொய் வழக்குகள் தொடர்ந்து போடப்பட்டும், கூலிப்படையை வைத்து கொலைவெறி தாக்குதல், அச்சுறுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறு, சமூக சொத்தான கனிம கொள்ளையை தடுக்கும் கடமையை செய்யும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட, மண்ணையும் மக்களையும் நேசிக்கும் அனைத்து சமூக செயல்பாட்டாளர்களின் உயிருக்கு கனிமக் கொள்ளையர்களால் பாதுகாப்பு இல்லாத சூழலே இன்று நிலவி வருகிறது.
எனவே, அரசியல் அமைப்பு சட்டப்படி இயற்கைவளங்களை பாதுகாக்க செயல்பட்டும், கனிம (மணல்) கொள்ளையைத் தடுத்த முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்ட நிலையில், உயிரை பணயம் வைத்து கனிம கொள்ளையைத் (அரசு சொத்தை) தடுக்க போராடும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும. சமூகசெயல்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டமியற்ற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


