நன்றி தி. நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் திரு தம்பான்
அவர்கள்
பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள்
– முத்தாலங்குறிச்சி காமராசு
8. மாஞ்சோலை எஸ்டேட் 99 வருட குத்தகை என்னாச்சு-?
சிங்கம்பட்டி ஜமீன்தார் ஆங்கிலேய ஆசிரியரை கொன்று விட்டார். அவரை காப்பாற்ற வேண்டும். எப்படி காப்பாற்ற, ? இதற்காக இளையரசனேந்தல் ஜமீன்தார் அப்பாசுவாமி நாயுடு நடவடிக்கையில் இறங்கினார். இச்சூழ்நிலையில் அப்பாசுவாமி நாயுடு அவர்கள் இறந்து போன வெள்ளைக்கார ஆசிரியரின் மனைவியை தியாகராயரின் இல்லத்திற்கு வரவழைத்து பேசினார் . அப்போது சிங்கம்பட்டி ஜமீன்தாரையும் உடன் வைத்துக் கொண்டார். அந்த அம்மையாரிடம் நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவித்து விட்டு, எப்படி கவர்னரிடம் பக்குவமாய் பேசினாரோ, அது மாதிரியை அம்மையாரிடமும் மனம் நெகிழப் பேசியுள்ளார். எல்லா விஷயங்களையும் மென்மையாகப் பேசி தன் சொல்லுக்கு இணங்கும் அளவிற்கு அந்த அம்மையாரை சாந்தப்படுத்தி தன் வழிக்கு அவரை, கொண்டு வந்து விட்டார். அம்மையார் மனதில், அப்பாசுவாமி நாயுடு என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான் என்ற அளவிற்கு திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே அமைதியாக இருந்தார்.
அந்த அம்மையாரிடம், அவ்விரு இளம் பையன்களும் நீண்ட நாட்கள் வாழ வேண்டியவர்கள். அவர்களை தண்டித்து விட்டாலும் தங்கள் கணவர் மீண்டும் வரப்போவதில்லை. ஏதோ நடந்தவற்றை ஒரு கெட்ட கனவாக நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டு குற்றவாளிப் பையன்களை மன்னித்து விட வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த அம்மையார் தான் மன்னித்தாலும் சட்டம் மன்னிக்க வேண்டுமே என்று கூறியுள்ளார். அதற்கு அப்பாசுவாமி நாயுடு அவர்கள் முதலில் அம்மையாரின் அபிப்ராயத்தையும் சொல்லும் படியும், பிற்பாடு மற்றவைகளுக்கு தான் கவனித்துக் கொள்வதாகவும் பதில் கூறியுள்ளார். அப்பாசுவாமி நாயுடுவின் சொல்லில் பொருள் உள்ளதென்று அறிந்து கொண்ட அம்மையார், அந்தப் பையன்களை மன்னித்து விட்டதாகவும், தாங்கள் என்ன சொல்வீர்களோ அதன்படி நடந்து கொள்வதாகவும் உறுதி சொல்லி விட்டார்.
இதுவே பாதி வெற்றி என அப்பாசுவாமி நாயுடு கருதினார். அதன் பின் அவ்வம்மையாரே அப்பையன்களின் செயலை மன்னித்து விட்டதான செய்தியை கவர்னரிடம் சொல்லி விட்டார்.
அதன் பின் பிரச்சனையை முடித்து அந்த அம்மையாரை லண்டனுக்கு அனுப்பி வைத் தார் ஜமீன்தார் அப்பாசுவாமி நாயுடு.
ஜமீன்தார் அப்பாசுவாமி நாயுடு தனது நண்பர் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு வாக்கு கொடுத்தப்படி வழக்கிலிருந்த அவர் மகனை விடுவித்தார். 1918ம் ஆண்டு நடந்தது இந்த பிரச்சனை , ஜமீன்தார் வாரிசை மீட்கவும், வழக்கை நடத்தவும் அதிகம் செலவானது. என்னதான் அசையா சொத்துக்கள் நிறைய இருந்தாலும் உடனடி பணமல்லவா தேவை?. அந்த அம்மாவை சும்மா கப்பல் ஏத்தி அனுப்பி விட முடியுமா?. இல்லை வெறுங்கையோடுதான் அனுப்பி வைக்க முடியுமா?.
ஆகவே பெரிய தொகையை அந்த அம்மாவிடம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே சொத்து, பத்துக்களை விற்க ஆரம்பித்தது ஜமீன் குடும்பம். அதன் ஒரு பகுதியாக 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட ஜமீன் காட்டில், 8,400 ஏக்கர் காட்டுநிலத்தை 1929ம் ஆண்டு 99வருடக் குத்தகைக்கு விட்டார் ஜமீன். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தது ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ (ஙிஙிஜிசி) நிறுவனம்.
இந்நிறுவனம் குத்தகை வழியே கிடைத்த காட்டை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது. அதுதான் மாஞ் சோலை டீ எஸ்டேட்! ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகும் அரசால் இந்த மாஞ்சோலை எஸ்டேட்டில் மட்டும் கைவைக்க முடியவில்லை. காரணம், 99 வருட குத்தகை. இது அரசை உறுத்திக்கொண்டேயிருந்தது. ஏனெனில் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி இருக்கிறதென்றால் பொதிகை மலை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதே காரணம். ஆங்கிலேயர் பங்கிள் துரை காலத்தில் இருந்தே இந்த காட்டை பராமரித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அந்த விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் அல்லவா? இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட, சிங்கம்பட்டி ஜமீன் காட்டை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பதற்கு தமிழக வனத்துறை முயற்சித்தது. இந்த முயற்சிக்கு 40 ஆண்டாகத் தடையாக இருந்தது ‘மாஞ் சோலை எஸ்டேட் டீ’ நிறுவனம். இப்போது அந்த நிறுவனத்தைச் சட்ட ரீதியாக வென்றிருக்கிறது வனத்துறை.
ஆம். குத்தகை முடிந்த நிலையில் இப்போது இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ள தமிழக வனத்துறை, இந்த நிலத்தை எல்லாம் மீட்க அரசாணையும் (12.1.2018) பிறப்பித்துள்ளது.
மாஞ்சோலை எஸ்டேட்டை வனத்துறை மீட்க பட்ட பாடுகளை தொடர்ந்து கூறுகிறேன். அதற்கு முன்பு மாஞ்சோலையை பற்றி அறிந்து கொள்வோம்.
மாஞ்சோலை என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறுக்கு அருகில் இருக்கும் ஒரு மலைச் சுற்றுலாத் தலமாகும். இயற்கை எழில் கொஞ்சம் இடமாகும். திருநெல்வேலியில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இவ்விடத்தை 3 மணி நேரப் பயணத்தில் அடையலாம். இவ்விடத்தில் தேயிலைத் தோட்டம் மிகுந்துள்ளன. மாஞ்சோலை மலை க்கு மேல் கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை எழில் மிகுந்த செர்க்க பூமியாக கோதையார் அமைந்துள்ளது. அது கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை எழில் மிகுந்த பகுதியாகும் இயற்கை வளத்தில் சிறந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தின் கோதையார் இயற்கையின் அழகி என்றே போற்றப்படுகிறது. அங்கே கோதையார் அணை உள்ளது.
அங்கு தமிழக மின்சார துறையின் மூலமாக மின்சாரம் தாயாரிக்கும் நிலையமும் உள்ளது. இங்கெல்லாம் நினைத்தப்படி போக முடியாது. அப்படியே போனாலும் பாதை கரடுமுரடாக விளங்கும். காட்டு மிருகங்கள். நம் முன்பே வந்து செல்லும். மாஞ்சோலை செல்லும் வழியில் கூட யானை கூட்டம் வந்தால் நாம் வாகனத்தில் கடந்து செல்வது எளிதல்ல.
மாஞ்சோலை எஸ்ட்டேட் செல்ல, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம். செல்லும் வழயில் ஒரு புறம் மணிமுத்தாறு அணையும், மறுபுறம் காமராஜர் காலத்தில் புதிதாக வெட்டிய பொங்கி வரும் அருவியான மணிமுத்தாறு அருவியையும் காணலாம். இங்கு குளித்தால் மனதுக்குள் சந்தோஷமும், உடலுக்குள் குளிரும் கொண்டாட்டமும் தான். ஆனால் அதே வேளையில் அருகில் உள்ள தடாகத்தில் தவறி விழுந்தால் அதோ கதிதான்.
மாஞ்சோலைக்கும் உயரே 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, மற்றும் கோதையாறு போன்ற இடங்களில், பசுமை மாறாக் காடுகளும் நிறைந்துள்ளன. இப்பகுதியில் மலைஉச்சிகளில் இருந்து மற்ற இடங்களை காணுதல் அருமையான ஒரு அனுபவமாக அமையும். இது ஒரு சிறந்த சுற்றுலா தலம்தான். இங்கு செல்லும் அரசு மினி பஸ்ஸில் செல்வது அதை விட பெரிய அனுபவமாக விளங்கும். குதிரைவெட்டி வரை பஸ் சென்று வருகிறது.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் இங்கு தனிப்பட்ட யாரும் ஒரு சதுர அடி இடம்கூட வாங்க முடியாது. முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது. அதனாலேயே இயற்கை எழிலை உள்ளவாறு காணமுடிகிறது. பெரும்பாலும் இத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வோருக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்ட நிலையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது ஊதியம் உயர்த்தப்பட்டது.
மாஞ்சோலை போராட்டம் என்பது தனி வரலாறு. அந்த வரலாறு கொக்கிரகுளம் தாமிரபரணி கரை வரை செல்லும். அங்கே விக்னேஷ் என்ற குழந்தை மரணத்துடன் மனதை பதைபதைக்க வைக்கும் வரலாறுகளும் உண்டு. அந்த ரத்த சரித்திரத்தினை நான் எனது தவழ்ந்து வரும் தாமிரபரணி என்ற நூலில் சிறப்பாக எழுதியுள்ளேன். வாங்கி படியுங்கள். அறிந்து கொள்ளலாம்.
சரி. தமிழக வனத்துறை இந்த காட்டை எப்படி மீட்டது என காணுவோம்.
ஒருசமயம் நான் சிங்கம்பட்டி ஜமீன்தார் மறைந்த முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவிடம் 99 வருடம் குத்தகை முடிந்த பிறகு தாங்கள் மாஞ்சோலை எஸ்டேட்டை மீட்டு விடுவீர்கள் அல்லவா? என கேட்டேன். அவர் சிரித்தார். ஆகட்டும் பார்க்கலாம் என்றார் அதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தது. அந்த அர்த்தம் வனத்துறை சம்பந்தப்பட்டதா? அல்லது மாஞ்சோலை எஸ்டேட்டை நாம் எப்படி பராமரிக்க அல்லது எப்படி மீட்க என்று சொல்வது போல இருந்ததா? என என்னால் கணிக்க முடியவில்லை?. இன்று அந்த அறிஞர் பெருமகனாரும் நம்மோடு இல்லை.
தமிழக வனத்துறையில் பல அரிய சாதனைகளையும், பலசோதனைகளையும் சந்தித்தவர்களின் பட்டியலில் காட்டிலக்கா அதிகாரி வெங்கடேஷ் அவர்களுக்கு நிரந்தர இடமுண்டு. யார் இந்த வெங்கடேஷ் ? அவரை பற்றி அறிவது அவசியமாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனராக ஆக 2006 முதல் 2012 வரை பணியாற்றிய போது, திருநெல்வேலி, சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 22000 ஹெக்டர் மற்றும் மாஞ் சோலைப் பகுதியில் சுமார் 8300 ஏக்கர் நிலம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்தது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து வனத்துறைக்குப் பல ஆயிரம் ஏக்கர் பூமி பெற முயற்சி எடுத்தவர். கொடைக்கானல் வனக்கோட்டத்தில் 2012முதல் 2016 வரை பணியாற்றிய போது மன்னவனூர் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தியும், கொடைக்கானல் வன உயிரினச் சரணாலயமாக அறிவிக்கை செய்யவும், அந்நிய களைச் செடிகளான வேட்டில், யூக்கலிப்டஸ் மற்றும் பைன் மரங்களை அப்புறப்படுத்தி, வனவிலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்தவும் பாடுபட்டவர். அவர் தான் வெங்கடேஷ். அவரால் எப்படி தாமிரபரணி காப்பாற்றப்பட்டது. கண்டிப்பாக அறிவது அவசியமாகும்.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


