தூத்துக்குடி லசால் மேல்நிலைப்பள்ளியின் நீதி மற்றும் அமைதி குழு (Justice & Peace Club) சார்பாக, நீதிமன்ற நடைமுறைகளை நேரில் கண்டு அறிந்துகொள்வதற்காக 30 மாணவர்கள் அடங்கிய குழுவினர் இன்று தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.
நீதிமன்றத்திற்கு வந்த மாணவர்கள், அங்குள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-1, நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-3 மற்றும் விரைவு நீதிமன்றம் ஆகியவற்றின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டனர். வழக்கு விசாரணைகள் நடைபெறும் விதம் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்ட பிறகு, மாணவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். அப்போது மாணவர்களின் சந்தேகங்களுக்கு நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த கல்விச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் நீதி மற்றும் அமைதி குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்கள் ஜெயக்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். மாணவர்களுடன் ஆசிரியர் ஜாய்சன் உடனிருந்தார்.
“நீதியும் அமைதியும் வகுப்பறையிலிருந்தே தொடங்க வேண்டும். எதிர்காலத்தில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுபவர்களாக நாம் திகழ வேண்டும்” என்று மாணவர்கள் இந்த வருகையின் நிறைவாகத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.


