தூத்துக்குடியில் ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.5லட்சம்லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சேதமானது.
தூத்துக்குடி ராம் நகரைச் சேர்ந்தவர் மோர்சிங் மகன் வினோத் குமார் (32). இவர், பாளை., ரோடு குரூஸ் பர்னாந்து சிலை அருகே ரெடிமேட் ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென இவரது கடையில் இருந்து புகை வந்தது.
அருகில் வங்கி வாசலில் இருந்த இரவு காவலாளி இதை பார்த்து ஜவுளிக்கடை உரிமையாளருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய துணை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள சுடிதார், சேலை உள்ளிட்ட ஜவுளிகள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று சிவராத்திரி என்பதால் சிவன் கோவிலுக்கு சென்றுவந்த பக்தர்கள், ஜவுளிக்கடையில் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


