தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பாதிப்புக்குள்ளான தெற்குஆத்தூர் தண்ணீர்பந்தல் வரண்டியவேல் தரைப்பாலம் பகுதி, நாககன்னிகாபுரம், புறையூர், கடம்பாகுளம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், காயல்பட்டிணம், கொம்புதுறை ஆகிய பகுதிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தெற்குஆத்தூரில் உள்ள காட்மீரான் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களிலும், கொம்புதுறை பல்நோக்கு புகலிடம் அமைப்பு தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்கள். மேலும், தெற்குஆத்தூர் நாககன்னிகாபுரம் பகுதியில் மழையினால் வீடு இடிந்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் செ.சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டிணம் பகுதியில் எதிர்பாராத அளவு மழை பெய்துள்ளது. காயல்பட்டிணத்தில் சுமார் 30 செ.மீ. மழை அதுவும் 6 மணி நேரத்தில் பெய்துள்ளது. திருச்செந்தூரில் சுமார் 24 செ.மீ. மழை பெய்துள்ளது.
16 நிவாரண முகாம்கள் மக்கள் நேற்று பாதுகாப்பாக வைக்கப்பட்டார்கள். இன்று 11 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 67 இடங்களுக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டால் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 36 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மழையால் பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான பகுதிகளை அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் நேற்றும், இன்றும் பார்வையிட்டு எந்தெந்த பகுதிகளுக்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆய்வு செய்து அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 300ல் இருந்து 400 நபர்களுக்கு மேல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆய்வின்போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், முக்கிய பிரமுகர் ராமஜெயம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.