தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்தது. காட்டாற்று வெள்ளம் காரணமாக சாத்தான்குளம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் நேற்று இரவு வெள்ளநீர் தேங்கி உள்ள இடத்திற்கு சென்று சாலையின் நடுவே குழி தோண்டி வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பிரதான சாலை துண்டிக்கப்பட்டது.
வெள்ளத்தினால் கூவன்கிணறு, ராமனேரி, செட்டிகுளம், கலுங்குவிளை, மேட்டுகுடியிருப்பு, தட்டான்குளம், கொம்பன்குளம், வரிப்பிலான்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வேறு பகுதிக்கு செல்ல முடியாமலும், வெளியிலிருந்து ஊருக்குள் வர முடியாமலும், அனைத்து கிராமங்களும் தனி தீவானது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில் பொதுமக்கள் அன்றாட தேவைக்காக வெளியே வரமுடியாமல் வீட்டினுள்ளேயே தஞ்சம் புகுந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.


