தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்துள்ளது. குழந்தைகள் வார்டு பகுதி, குழந்தைகள் வார்டு தீவிர சிகிச்சை பகுதி, இரத்த வங்கி மற்றும் பல்வேறு வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்குவதற்காக 97 புகலிட மையங்கள் தயாராக உள்ளன. அணைகளில் இருந்து மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதிக மழை பெய்தாலும், பாதிப்பு ஏற்படாத வகையில் அணைகளில் தண்ணீர் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் எப்பகுதியில் ஆறு, குளங்களில் உடைப்பு ஏற்பட்டாலும், அவற்றை சரி செய்ய 30,000 மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடாதபடி அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
எஸ்.ஐ.ஆர். பணியை அவசர கதியில் செய்து கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களே மனரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது. 6 மாதங்களில் செய்ய வேண்டிய பணியை, எதற்காக இவ்வளவு அவசரமாக செய்கிறார்கள் என்பது தான் கேள்வி என்றார். அப்போது, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


