கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரிய வழக்கு. லண்டன் தேம்ஸ் நதி பராமரிப்பு திட்டத்தை தாமிரபரணியிலும் செயல்படுத்தலாமே. மதுரை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன.
இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஏற்கனவே பல்வேறு உத்தரவிகளை பிறப்பித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நதிகளை தூய்மைப்படுத்த எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது? என கேள்வி எழுப்பினர்.
பின்னர், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், தூய்மையாக வைத்திருக்கவும் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஒவ்வொருவரும் தாமிரபரணியை தூய்மையாக பராமப்போம் என உறுதி கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மராட்டிய மாநிலத்தில் நீர்நிலைகளில் குறிப்பிட்ட வகை தாவரங்களை வளர்க்கின்றனர். இவை கழிவுகளை உறிஞ்சிவிட்டு, ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இது போல தாமிரபரணி ஆற்றிலும், நீர்நிலைகளிலும் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? லண்டன் தேம்ஸ் நதியை தூய்மைப்படுத்தவும், பராமரிக்கவும் தீட்டிய திட்டத்தை தாமிரபரணியிலும் ஏன் செயல்படுத்தக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு சார்பில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதா? என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். மேலும் அந்த ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து நெல்லை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.