தூத்துக்குடி டூவிபுரம் பூங்காவை, மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் இன்று காலை நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் பகுதியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள சங்கரநாராயணன் பூங்காவில் அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் மற்றும் சீரமைக்கப்பட்ட நடைபயிற்சிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேயர் ஆய்வின் போது அங்கிருந்த பொதுமக்கள், “பூங்கா தற்போது மிகப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது, இனி மழைநீர் தேங்காது” என மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆய்வின் போது பூங்கா கழிப்பறை கதவு சரியாக மூடப்படவில்லை என்று சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் புகார் அளித்ததை அடுத்து, “அடுத்த 1 மணி நேரத்திற்குள் கதவைச் சரிசெய்து தகவல் தெரிவிக்க வேண்டும்” எனப் பொறியாளர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வால்வு பகுதியில் நீர் கசிவதைக் கண்ட மேயர், இனி பூங்காவிற்குள் எங்கும் நீர் தேங்கக் கூடாது என அதிகாரிகளை எச்சரித்து, உடனடியாகச் சரிசெய்ய ஆணையிட்டார்.
இரவு நேரங்களில் பூங்காவின் உயர் மின்விளக்குகள் முழுமையாக எரிவதை அதிகாரிகள் நேரில் வந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பூங்காவிற்குள் சிலம்புப் பயிற்சி பெறும் மாணவர்களின் நலன் கருதியும், நடைபயிற்சி மேற்கொள்வோருக்குப் பாதிப்பு இல்லாத வகையிலும், பூங்காவின் வெளிப்பகுதியில் ‘ஹாலோ பிளாக்’ கற்கள் பதித்துத் தனி உள்கட்டமைப்பு வசதி செய்து தருமாறு அதிகாரிகளுக்கு மேயர் ஆணையிட்டார்.
தேர்தல் நடத்தை விதிகள் தளர்ந்த பின், மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் தூத்துக்குடி மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.


