தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மீளவிட்டான், ராஜ ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் மனைவி திவ்யபாரதி (27), இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். சூரிய பிரகாஷ் தூத்துக்குடியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்று மனைவியுடன் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த திவ்யபாரதி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
திவ்யபாரதி திருமணமான 5 ஆண்டுகளில் இறந்துள்ளதால் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுகிர் வழக்கு பதிவு செய்துள்ளார். கோட்டாட்சியர் பிரபு விசாரணை நடத்தி வருகிறார்.


