ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் குடியரசு இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் “சிகப்பு நகை” என்று பொருள், இச்சொல்லிலிருந்து “ஜவஹர்லால்” என்ற பெயர் உருவானது.
‘காசுமீரப் பண்டிதர்’ என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். (காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று. இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது). நேரு குடும்பம் பிரதான வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து வந்த மோதிலால் நேரு, பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார். ராஜாக்கள், ஜமிந்தார்கள் மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பேரும், புகழுடன் நிதியும் அவரிடம் குவிந்தது. எனவே மோதிலால் தனது இருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்
இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட்டும், கிருஷ்ணாவும் ஆனந்தபவன் என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.
ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை வீட்டிலிருந்து வெகுதொலைவு வந்ததையும் உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.
நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்குப் பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது. மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாகத் தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
கமலா கவுல் என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 ஆம் ஆண்டில் பிப்ரவரி 7 ஆம் தேதியில் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால் 1936 இல் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் உடன்பிறந்தாள் விசயலட்சுமி பண்டிதையருடனும் வாழ்ந்தார்.
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.
1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921 ல் நேரு முதல் முறையாக சிறைக்குச் சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஓர் எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.
ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை “நவீன இந்தியாவின் சிற்பி” என்று குறிப்பிடுவதுண்டு. இவருடைய மகள் இந்திரா காந்தியும் மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள்.
தீன் மூர்த்தி பவன் – நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய இல்லமாகவும், தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகம்
நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945ம் ஆண்டு சூன் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர்.
நேரு இடைக்கால அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்தி செல்லும்போது மத வன்முறை, அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரியது ஆகியவற்றால் உண்டான கலவரங்கள் நேருவின் ஆற்றலை முடக்கின. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் நேரு தயக்கத்துடன் வேறு வழியின்றி 1947 சூன் 3 -இல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக “விதியுடன் ஒரு போராட்டம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.


