பொதிகை மலை பயண அனுபவபவத்தை விரிவாக எழுத நண்பர்கள் சிலர் கேட்டதால் என் பயண அனுபவத்தை சுருக்கமாக எழுதுகிறேன் என்னுடன் பயணியுங்கள்.
பொதிகை மலை யாத்திரைக்கு காட்டிற்குள் மட்டும் 3 நாட்கள் இருக்கவேண்டியிருக்கும். முதல் நாள் 16 கிமீ நடக்க வேண்டும். இரண்டாம் நாள் ஏற 6, இறங்க 6 என மொத்தம் 12 கிமீ நடக்க வேண்டியிருக்கும். மூன்றாம் நாள் திரும்பி செல்ல 16 கிமீ நடக்க வேண்டியிருக்கும்.
பயணத்தின் முதல் நாளான போனக்காடு அருவி அடிவாரம் ( தேயிலை தொழிற்சாலை) அங்கிருந்து 3 கிமீ தூரம் உள்ள போணக்காடு வனத்துறை அலுவலகத்திற்கு சென்றோம் போகும் வழியில் தார்ரோடு இல்லை.
போணக்காடு வனத்துறை அலுவலகத்தில் வழக்கமான சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் மருத்துவரின் உடல் தகுதி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை சரிபார்த்து வனத்துறை ரிஜிஸ்டரில் கையொப்பம் இட்டோம்.
பின்னர் 10 பேர் கொண்ட குழுவிற்கு 4 கைடுகளை வன அதிகாரிகள் தந்தனர்.
காலை 8.45 மணியளவில் பயணத்தை தொடங்கினேன். தொடக்கத்தில் பயணம் வனத்தில் ஏற்றம் இறக்கம் எதுவுமின்றி நேர்பாதையாக மிக அழகாக இருக்கும். தொடக்க இடம் பேப்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி. காட்டின் அமைதியையும், பறவைகளின் ஓசையையும் கேட்டு்க்கொண்டே சந்தோசமாக நடந்தோம்.
ஒரு 2 கிமீ நடந்ததும் வனவிநாயகர் கோவில் வரும். வனவிநாயகரிடம் அகத்தியரை தரிசிக்க செல்லும் இந்த பெரும் பயணத்தில் எந்த ஆபத்தும், வனவிலங்குகளால் எந்த தொல்லையும் வரக்கூடாது என வேண்டினோம்.
பின்னர் சற்று தூரம் நடந்ததும் யானைகள் நடமாட்டமுள்ள லத்திமூட்டா வனப்பகுதி வந்தது.
இங்கு யானைகள் சர்வசாதாரணமாக வலம்வரும் என்பதால் மனிதர்கள் ஓடிச்சென்று மறைந்துகொள்ள சுற்றிலும் குழியாலான மறைவிடம் உள்ளது.
இந்தபகுதியில் யானைகள் வந்து முதுகை தேய்த்த அடையாளங்கள் மரங்களில் காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு மரத்தை காண்பித்த வழிகாட்டி, 10 ஆண்டுகளுக்கு முன் இந்த மரத்தின் அருகில்தான் காட்டுயானைகள் இருவரை மிதித்துக் கொன்றன என கூறினார்.
2 கிமீ வனத்திற்குள் நடந்ததும் முதல் அருவி தென்பட்டது. இங்கு வனதேவதை வழிபாடு நடத்த சிறிய கல்லிலாலான சிலைகள் காணப்படுகின்றன. வனதேவதையை வணங்கி நடக்கத் தொடங்கினோம்.
மீண்டும் 2 கிமீ நடந்ததும் வாழப்பள்ளியாறு அருவி வருகிறது. மிகவும் அழகான ஆனால் வழுக்கல் ஆபத்துக்கள் நிறைந்த அருவியாக இது இருக்கிறது. இங்கு குளித்துவிட்டு, எங்களுக்கு கொடுக்கப்பட்ட காலை உணவை அங்கு உண்டோம். நானும் மற்றும் நண்பர்கள் பலர் அட்டைக்கடிக்கு உள்ளானோம்.
பின்னர் சிறிது ஓய்வுக்கு பின் பயணத்தை தொடர்ந்தோம். வழியில் கரமனையாறு, வாமனபுரம் ஆறு, கடந்து அட்டையாறு அடைந்தோம். பெயருக்கு ஏற்ப்ப அட்டை கடி உண்டு. இந்த ஆற்றின் அருகில் இருமுக ருத்ராட்சங்கள் கிடைத்தன. இதனை பத்ராட்சம் என்றும் அழைப்பர்.
இந்த இடம் முடிந்ததும், மூச்சை முட்டவைக்கும் புல்காடு ஏற்றம் தொடங்குகிறது. வண்டியை பஸ்ட் கியரில் போட்டு செல்வது போன்ற மிகச்சரிவான ஏற்றம். மூச்சிறைக்க புற்களை பற்றிக்கொண்டும் ஏறவேண்டும். இந்த ஏற்றம் முடிந்ததும் சற்று குறைந்த ஏற்றத்தில் காடு சமமாக உயர்ந்து செல்கிறது. உலகின் மிக அழகான புல் வெளிகளில் ஒன்றை இங்கு காணலாம்.
புல்வெளிகளில் மான், காட்டெருமை, கரடி, யானை முதலிய விலங்குகள் அதிகாலையில் மேய்வதாகவும், வெயில்வர வர நிழல் தேடி அருகில் உள்ள மரக்கூட்டங்களுக்குள் விலங்குகள் சென்றுவிடும் என வழிகாட்டி கூறினார். இந்த புல்காட்டில் பலமுறை காட்டெருமைகள் மேய்வதை பார்த்திருப்பதாக பக்தர் ஒருவர் கூறினார்.
மிக அழகான சொர்க்கம் போன்ற இந்த பகுதியை கடந்து செல்ல மனமில்லாமல் மெதுவாக நடந்தேன். இங்கு கிடைக்கும் மூலிகை காற்றில் ஒருவித ரம்யமான மணம் இருக்கும். மூலிகை நீரும் மிக சுவையாக இருக்கும்.
பின்னர் பேரழகு நிறைந்த இந்த புல்காடு வனம் முடியும்போது, சீதா தீர்த்தம் என்ற சிறிய நீர்வாய்க்கால் வருகிறது.
பின்னர் 7 வளைவு என்ற மலைச்சரிவை கடக்கவேண்டும். மொட்டை ஏற்றம் என்பதால் 7 முறை வளைந்து வளைந்து ஏறும் விதத்தில் வழியை வெட்டி வைத்துள்ளனர் வனத்துறையினர். இதனால் 7 வளைவு என பெயர் வந்ததாக வழிகாட்டி கூறினார்.
பின்னர் ஏசி காடு என்ற காட்டிற்குள் நுழைந்தோம் அடர்ந்த வனமாகவும், மிகவும் குளிர்ச்சியாகவும் காணப்டுவதாலும், ஏசியில் இருப்பது போல் குளிர்வதாலும் இதற்கு ஏசிகாடு என பெயர் வந்தது. இங்கு கரடிகள் அதிகம் நடமாடுவதற்கான அடையாளங்கள் தெரிந்தன.
பின்னர் முட்டுஇடிச்சான் காட்டிற்குள் நுழைந்தோம். நாம் ஏறும்போது நமது முகத்தில் நமது கால் முட்டு இடிக்கும். அந்த அளவிற்கு கடும் ஏற்றம். முறையான மலையேற்ற அல்லது நடைபயிற்ச்சியோ அனுபவம் இல்லாதவர்கள் வந்தால் நாக்கு தள்ளிவிடும். கடும் ஏற்றம் அட்டைகடி வேறு. சிலருக்கு திரும்பி வீட்டுக்கு போய்விடலாமா எனத் தோன்றும். அதுவும் முடியாது ஏனென்றால் மதியம் மூன்று மணிக்கு மேல் மழை வந்துவிடும் என்று வனத்துறை அதிகாரிகள் எங்களிடம் சொல்லி இருந்தார்கள் அதுக்குள் நாங்கள் முதல் நாள் இரவு தங்க இருக்கும் அதிருமலை கேம்ப் செல்ல வேண்டும்.
இந்த கடும் ஏற்றம் கடந்து, யானைக்காடு வருகிறது அங்கங்கு யானைகள் நடமாடியதற்கான அடையாளங்கள் உண்டு. அடிக்கடி யானையும் யாத்ரீகர்களும் சந்தித்த பகுதி. இது கடந்து மஞ்சமாதா சிலை வரும் காணிமக்கள் வனதேவதைக்கு மஞ்சளை தூவுவதால் இந்த பெயர் பெற்றது.
ஒருவழியாக மதியம் 2.45 மணியளவில், 16 கிமீ நடந்து, அன்று இரவு தங்க கேரள வனத்துறை ஏற்பாடு செய்துள்ள, அதிருமலை கேம்ப் வந்து சேர்ந்தேன். காலையில் வனத்துறை அதிகாரிகள் எங்களிடம் சொன்னது போல் சரியாக 2.55 மணியளவில் கடும் மழை வந்துவிட்டது பல பேர் காட்டுக்குள் மாட்டிக் கொண்டார்கள். ஒரு வழியாக அனைவரும் மாலை 6 மணிக்குள் வந்து சேர்ந்து விட்டார்கள்.
பின்னர் சமையல் கைடு மாலை 5 மணி அளவில் அனைவருக்கும் வாழக்காய் பஜ்ஜி மற்றும் டீ கொடுத்தார்கள். பின்னர் நல்லபடியாக முதல்நாள் தங்குமிடம் வந்து சேர்ந்த தகவலை வீட்டிற்கு தெரிவிக்க போன் செய்ய சென்றேன். இங்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் நீண்ட நேரம் காத்திருந்தால் ( BSNL , jio , Airtel ) போன் டவர் வரும். நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் எனக்கு டவர் கிடைத்தது.
பின்னர் சமையல் கைடு மாலை 7 மணி அளவில் அனைவருக்கும் இரவு உணவை தயார் செய்து விட்டார். கஞ்சி சாப்பாடு அப்பளம் மோர் மிளகாய் மற்றும் கூட்டு துவையல் அனைவருக்கும் கொடுத்தார்கள்.
இரவு பக்தர்களின் குரட்டை ரீங்காரத்தில் உரங்கினோம். இரவு முழுவதும் கடுமையான குளிர்.
எங்களது குழுவில் 7 நண்பர்களால் உடல் வலி காரணமாக இரண்டாவது நாள் மலையேற்றம் செய்ய முடியவில்லை அவர்கள் அதிருமலை கேம்பில் தங்கி விட்டார்கள். மூன்றாவது நாள் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஏழு பேரும் வேறு பாதையில் ஜிப்பில் பயணம் செய்து கேரளா வனத்துறை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.
பயணத்தின் இரண்டாவது நாளான அதிகாலை சூடான கட்டங்காபியுடன் சமையல் கைடு எழுப்பினார். கேரள வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் காலைக்கடன்களை முடித்து இரண்டாவது நாள் மலையேற்றத்திற்கு தயாரானோம். காலையில் சமையல்காரர் பூரி தந்தார்.
காலை வழக்கம்போல புகைப்படம் எடுத்துவிட்டு, நடையை தொடர்ந்தோம். தொடக்கத்தில் உள்ள மாடன்தம்புரான் மற்றும் வனதேவதைகளை வணங்கி, துணைவர வேண்டி பயணத்தை தொடங்கினோம்.
நேற்றிரவு மழை பெய்ததால், மீண்டும் அட்டை தொந்தரவு தொடங்கியது. மிகவும் கடினமான இந்த மலையேற்றம் முழுவதும் யானை மற்றும் காட்டெருமைகளின் தடங்கள் உண்டு. இங்குள்ள ஒரு நீரோடையின் அருகில் வைத்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் என்ற வழிகாட்டியை காட்டெருமை முட்டிக் கொன்றதாக கைடு கூறினார்.
கடினமான ஆனைக்காடு மலையேற்றம் முடிந்ததும், மூங்கில்காடு மலையேற்றம் தொடங்குகிறது. இந்த இடம் முழுவதும் யானைகள் மற்றும் காட்டெருமைகளின் அடையாளங்கள் உள்ளன. இந்த மலையேற்றமே, யானை பாதையில்தான் உள்ளது. மேலே ஏறும்போது மூலிகைகளின் மணமும் நம்மைத்தழுவி செல்லும் மேகங்களும் மனதிற்கு இதமானவை. மிருகங்கள் வந்தால் தப்பி ஓடமுடியாத இந்த இடத்தில் கூட காட்டெருமை தாக்குதல் நடந்ததாக வழிகாட்டி கூறினார்.
மூங்கில்காடு ஏற்றம் முடிந்தவுடன் பூலோக சுவர்கம் போல இருக்கும் அகத்தியர் வனம் என்ற தமிழக வனப்பகுதி வருகிறது. இந்த வனப்பகுதி முழூவதும் மூலிகை வளத்தால் நிரம்பியிருக்கும். அகத்தியர் குட்டையானவர் என்பதால் இங்கு அனைத்துமே குட்டையானதுதான். மரங்கள் அனைத்தும் குட்டையாக இருக்கும். உலகிலேயே மிக குட்டையான கல்யானை இங்கு மட்டுமே உள்ளதாக சொல்கிறார்கள். கல்யானையை கேரள வனத்துறை பிடித்த ஆதாரங்கள் உண்டு.
அகத்தியர் வனம் கடந்ததும் தாமரைக்குளம் என்ற ஐஸ் தண்ணீர் குட்டை உண்டு. இந்த சிற்றருவி தாமிரபணியின் கிளைநதி ஆகும். இந்த நீரைக்குடித்தால் உண்மையில் தாமிர மணம் மற்றும் ருசி எளிதாக புரியும். தாமிரபரணி கட்டுக்கதை அல்ல அது சத்தியமான வாழ்ந்துகொண்டிருக்கும் வரலாறு என்பது நமக்கு புரியும்.
அதன் பிறகு பொங்கலாப்பாறை என்று கேரளத்திலும் சங்குமுத்திரை என்று தமிழகத்திலும் அழைக்கப்படும் இந்த இடம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் வருகிறது. இந்த மலையின் உச்சியில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் மிகவும் அழகான நடைபாதை உள்ளது.
இங்குள்ள அகத்தியர் வனத்தில் உயிர்காக்கும் பல அரிய மூலிகைகள் உள்ளன. பழைய மன்னராட்சி காலங்களில் முனிவர்கள் இங்குள்ள மூலிகைகளை பறித்து இங்குள்ள உரல்களில் அரைத்து ஊருக்குள் கொண்டு சென்றதற்கு அடையாளமாக பாறையில் மூலிகை அரைக்கும் உரல்கள் உள்ளன.
மேலும் இங்குள்ள பாறையில் இந்த இடம் பண்டைய பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்ததற்கான பாண்டிய மன்னர்கள் அரசு சின்னம் பாறையில் காணப்படுகிறது. இந்த பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர் சங்குவை தனது அரசு சின்னமாக வைத்திருந்தார். எனவே இங்கு சங்கு முத்திரை பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்குமுத்திரை என பெயர் வந்தது. பண்டைய தமிழர்களின் வீரமும் பெருமையும் சங்குமுத்திரை மூலம் தெளிவாக புரிகிறது.
தமிழகத்தின் பாபநாசம் வழியாக இந்த பயணத்திற்கு 2006-வரை வனத்துறை அனுமதியளித்து வந்தது. புலிகளுக்கு பாதிப்பு என்பதால் அதன்பின்னர் யாரையும் பாபநாசம் வழியாக அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் பாபநாசம் வழியாக வரும் பக்தர்கள் சங்குமுத்திரை வழியில் வந்து கேரள பக்தர்களோடு சேர்வார்கள் என்று கைடு கூறினார்.
பின்னர் மீண்டும் முட்டு இடிச்சான் பாறை என்ற கடின மலையேற்றம் தொடங்கியது. இந்த மலையேற்றம் நம் உடலில் உள்ள அனைத்து சக்தியையும் உறிஞ்சிவிடும். அகத்திய பெருமானை நினைத்து மனம் தளராமல் ஏற வேண்டும். சிலருக்கு “ஏனடா இங்கு வந்தோம்? திரும்பி போய்விடலாமா?” என்று கூட தோன்றும்.
இந்த கடினமான ஏற்றம் முடிந்ததும் மிகவும் ஆபத்தான பொதிகைமலை மொட்டை மலையேற்றம் தொடங்குகிறது. இருபக்கமும் திரும்பி பார்த்தால் தலையே சுற்றும் அந்த மொட்டை பாறையில் எழுந்து நின்றால் பூமியிலேயே நாம்தான் உயரத்தில் நிற்பதுபோல் தோன்றும். சிறிது வழுக்கி விழுந்தாலும் மரணம் நிச்சயம். உடலை கண்டெடுப்பது கூட கடினம். இந்த பாறையில் வழுக்கு விழாமல் இருக்க கயிறு கட்டியிருக்கிறார்கள். நான் வழக்கம்போல 4 கால் கொண்டு ஏறினேன்.
இந்த பாறை ஏற்றம் முடிந்ததும் மீண்டும் கயிறை பிடித்து ஏறும் ஒரு மலையேற்றம் உண்டு. இதை ஏறி முடித்தால், சொர்கம் போன்ற ஒரு மூலிகை வனம் வரும். இதிலிருந்து ஐந்து தலை பொய்கை என்ற தமிழக பகுதியை பார்க்கலாம். மேலும் பாபநாசம் கோவில், பாபநாசம் அணை, உள்பட திருநெல்வேலி புறநகர் வரை பார்க்கலாம். பாறையின் மறுபுறம் கேரளாவின் நெய்யாறு டேம் மற்றும் பேப்பாறை டேம்களையும் கேரள நகரங்களையும் பார்க்கலாம்.
இந்த வனத்தை கடந்தால், மீண்டும் ஒரு கயிறேற்றம் உண்டு. இதில் ஏறும்போது விஞ்ஞாணி ஒருவர் வழுக்கிவிழுந்து இறந்து போன வரலாறும் உண்டு. இந்த ஆபத்தான ஏற்றத்தை கடந்தால் பொதிகை மலை என்று அழைக்கப்படும் ஏக பொதிகையை அடையலாம். சுமார் 6350 அடி உயரம் கொண்டது பொதிகைமலை சிகரம்.
இந்த பொதிகை மலையில்தான் தமிழும் தென்றலும் உருவானது என்று புராணங்கள் கூறுவது உண்மைதான். சொர்க்கம் போல இருக்கும் இந்த சிகரம்.
இங்குள்ள குட்டையான அழகிய சோலையில் மாமுனிவர் அகத்தியர் காட்சி தருகிறார். கண்கள் குளமாக பக்தி பரவசத்தில் அகத்தியரை கண்குளிர கண்டோம். இன்னும் அவர் அங்கு வாழ்வதை உணர்வால் உணர்ந்தோம். பழங்குடியின மக்கள் இன்னும் அகஸ்தியர் அங்கு வாழ்வதாக கூறுகிறார்கள்.
குழுவினர் அனைவரும் அவரவர் மனதிற்கு ஏற்ப தியானத்தில் அமர்ந்தோம். இங்கு முனிவர்கள் வணங்கிய சிவபெருமான் சிலையையும் தரிசித்தோம். நாங்கள் பொதிகை மலையை அடைய பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் அகத்திய தரிசம் ஒரே நொடியில் மறக்கச் செய்தது.
அகத்தியரை பார்த்தவுடன் மனது அடங்கி ஒடுங்கியது. அந்த இடத்திற்கு ஏதோ பெரிய தெய்வீக சக்தி உண்டு. நான் அகத்தியரிடம் பேச நினைத்தது, கேட்க நினைத்தது எல்லாம் சித்த பிரமையால் அந்த நேரம் எனக்கு மறந்துவிட்டது. சாதரண விருப்பு வெறுப்புக்கு மயங்கும் மனிதனான என்னால், சித்தர்களின் தலைவரான அகத்தியரை ஒரு அணுஅளவு மட்டுமே உணர முடிந்தது. அகத்தியரை உணர கடும் மனமொடுக்கம், தியானம், தவம் கடும் முயற்ச்சி வேண்டும்.
சிவபெருமானின் தலைமை சித்தரான அகத்தியர் மற்றும் பொதிகை மலையை பிரிய மனமில்லாமல் நின்றோம். மதியம் 12 மணிக்கு மேல் யாரும் அங்கு நிற்க அனுமதியில்லை என வழிகாட்டிகள் அவசரப்படுத்திக் கொண்டே இருந்தனர். பல நண்பர்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். நான் சிறிது நேரம் அங்கேயே இருந்து விட்டு ஒருவழியாக 12.45 மணிக்கு இறங்க தொடங்கினேன்.
தென்கைலாயம் என்று அழைக்கப்படும் அழகிய அகத்தியர் வனத்திற்கும், என் தாய் தமிழ்நாட்டு வனத்திற்கும் பிரியா விடை கொடுத்து ஒரே நடையாக நடந்து நாங்கள் தங்குமிடமான கேரள அதிருமலை கேம்ப் வந்தோம்.
இன்று மாலை கேரள முருங்கை சாம்பார், ரசம், முட்டைக்கோஸ் பொரியல் உடன் சாப்பாடு கிடைத்தது. பின்னர் குடும்பத்திடம் பாதுகாப்பாக வந்து சேர்ந்த விபரத்தை தெரிவித்து உறங்கினேன்.
பயணத்தின் 3-ம் நாள் காலை கேரளா தேங்காய் புட்டு கட்டன்காப்பியுடன் காலை விடிந்தது. கடைசியாக அகத்தியர் வாழும் மலையை பார்த்து வணங்கிவிட்டு வீடு நோக்கிய மலையிறக்கத்தை தொடர்ந்தோம். அழகிய வனங்களை கடந்து அட்டையாறு அடைந்தோம். ஏற்றம் போலவே இறக்கமும் கொஞ்சம் கடினமானதே. பேலன்ஸ் செய்து இறங்குவதால், இரண்டு தொடைகளும் வலிக்கும்.
யாரும் துணைக்கு இல்லாத காட்டுப்பயண அனுபவத்தை முழுமையாக எனக்கு அகத்தியர் அருளினார். ஒருவிதத்தில் மிகவும் ரசித்து அனுபவித்துக்கொண்டே தனியாக நடந்தேன். சில இடங்களில் நின்று சுற்றுமுற்றும் ஏதாவது மிருகங்கள் இருக்கிறதா என பார்த்தேன். பயந்தது போலவே புதிதாக யானைகள் ஒடித்துபோட்ட மரம் பாதையில் விழுந்து கிடந்தது. மிக சமீபத்திய யானை சாணியும் கிடந்தது. யானைகள் அருகில்தான் உள்ளன என்பதை உணர்ந்து கொஞ்சம் த்ரில்லாக உணர்ந்து நடந்தேன். திரும்பி நண்பர்களிடம் செல்ல 2 கிமீ பின்னோக்கி நடக்க வேண்டும். வழிகாட்டியை பிடிக்க முன்பக்கம் 2 கிமீ நடக்க வேண்டும்.
உள்ளுணர்வுபடியே தனியாக 2 கிமீ கடந்த பிறகு கரமனையாறு என்ற ஆற்றில் வழிகாட்டி இருந்தார். யானைகள் அருகில் இருக்க வாய்ப்பிருப்பதால் எனக்காக காத்திருந்ததாக கூறினார். யானை அருகில் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? என வழிகாட்டியிடம் கேட்டேன். அதற்கு யானை கழிவுகளின் தன்மை மற்றும் யானை செல்லுமிடமெல்லாம் பின் தொடரும் ஒரு வகை “ஈ” கூட்டங்களை வைத்து கணிப்போம் என்றார்கள். அவர் கூறியது போலவே “யானை ஈ” அங்கு சுற்றியது. பொதுவாக யானைகள் மனிதர்கள் குரல் கேட்டால் விலகி செல்லவே விரும்பும் என்றார் வழிகாட்டி.
அந்த இடத்தில் நடக்கமுடியாமல் தசைப்பிடிப்புடன் நண்பர் ஒருவர் வலியால் துடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு சில இலவச அறிவுரைகளை வழங்கிவிட்டு நடை பயணத்தை தொடர்ந்தேன்.
ஒருவழியாக மதியம் 12.15 மணியளவில் போணக்காடு வனத்துறை அலுவலகம் வந்து சேர்ந்தோம். பொதிகைமலை பயணத்தை நிறைவு செய்தோம்.
பொதிகை மலை அகத்திய தரிசன பயணம் எனக்கு மனவலிமையையும், உடல் வலிமையையும் ஆண்மீக உணர்வையும் தொடர்ந்து தருகிறது. சிவபெருமானின் தலைமை சித்தர் அகத்தியர் வாழும் மற்றும் என் உயிரினும் மேலான தமிழ் மொழி பிறந்த பொதிகை மலைக்கு செல்ல எனக்கு வாய்ப்பளித்த என் இறைவன் சிவபெருமானுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். என் உடலில் வலு இருக்கும்வரை இந்த பயணத்தை தொடர தீர்மானித்துள்ளேன்.
தமிழக பக்தர்கள் அனைவரும் நமது பாரம்பரிய வழியான பாபநாசம் வழியாகவே வர இறைவனும் வனத்துறையும் நமக்கு உதவ வேண்டும் என விரும்புகிறேன். வாழ்வில் ஒருமுறையேனும் பழந்தமிழர்களின் பூர்வீக வழியான பாபநாசம் வழியாக அகத்தியரை தரிசிக்க செல்ல விரும்புகிறேன். முன்புபோல தமிழர்களும் தமிழகம் வழியாக பொதிகைமலை யாத்திரை சிரமமில்லாமல் செல்லவேண்டும் என விரும்புகிறேன்.
சிவபெருமான் என்ன நினைக்கிறாரோ அதுதானே நடக்கும்…
தேவையான ஆவணங்கள்…
1. ஆதார் அட்டை
2. மெடிக்கல் சர்டிபிகேட்
தனிநபராக செல்ல முடியாது குறைந்தது ஐந்து நபர்கள் அல்லது பத்து நபர்கள் ஒரு குழுவாக தான் செல்ல முடியும்.
பொதிகை மலைக்கு எப்படி செல்வது ?
திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக தமிழகப் பக்தர்கள் பன்னெடுங்காலமாக மிகவும் கடினமாக பயணம் செய்து அகத்தியர் பெருமானைத் தரிசித்து வந்தனர்.
இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசு வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009-ல் தமிழக அரசு வனத்துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்லலாம் என அறிவுறுத்தியது.
இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக “eco-tourism சூழலியல் சுற்றுலா”-வாக ஒவ்வொரு ஆண்டும் November To April வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர்.
இதற்காக கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் வட்டியூர்காவு PTP நகரிலுள்ள கேரள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு கட்டணத்துடன் கூடிய அனுமதி ஒவ்வொரு ஆண்டும் January February through online and November, December & March, April through offline ஆகிய மாதங்களில் வழங்கப்படுகிறது.
14 வயதிற்கு மேற்பட்ட திடகாத்திரமான ஆண்கள் பெண்கள் இருபாலரும் பயணம் செய்யலாம்.
எனும் வலைதளத்தில் சென்று online-ல் booking செய்து பயணம் செய்யலாம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தினமும் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
டிக்கெட் புக் செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளது.
1. ஆன்லைனில் புக்கிங் செய்து போகலாம் நபர் ஒருவருக்கு 2500 ரூபாய் . ஆனால் இதில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். ( Online booking only January to February month)
2. நீங்கள் நேரடியாக திருவனந்தபுரம் வனத்துறை அலுவலகத்துக்கு சென்று புக்கிங் செய்து பேக்கேஜ் முறையில் செல்லலாம் நபர் ஒருவருக்கு 4500 ரூபாய் வரலாம். ( Offline package ticket November & December / March & April )
3. நீங்கள் ஏஜெண்டுகள் மூலம் புக் செய்து போகலாம். நபர் ஒருவருக்கு 7500 to 8000 ரூபாய் வரலாம்.
என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரை ஏஜெண்டுகள் மூலம் போவதே சிறந்த வழியாகும்.
இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகமோ இருந்தால் என்னை இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும்.