
உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்புக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருக்கும் மீரான்குளம் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பிக்கு மனு அனுப்பியுள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகன் சாம் கில்டன் உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் பிளஸ்சிங் 6ஆம்ஆண்டு படித்து வருகிறார். இதற்கிடையே சாம் கில்டன் இந்தியா திரும்ப நாளை 27ஆம்தேதி முன்பதிவு செய்துள்ளார். அதற்குள் உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கிடையே போர் மூண்டுள்ளது. இதனால் விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் முடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சாம்கில்டன், பிளஸ்சிங் ஆகியோர் இந்தியாவுக்கு திரும்புவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்கில்டன், பிளஸ்சிங் பெற்றோர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோருக்கு தனது மகனுக்கு எந்தவித பாதிப்பும்இல்லாமல் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அனுப்பியுள்ளனர்.