ஆதிச்சநல்லூரில் தற்போது உலக தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான அகழாய்வு பணி திருச்சி தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் நடந்து வருகிறது.
இந்த இடத்தில் சைட் மயூசியம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குஜராத் மாநிலம் பிரதமரின் சொந்த ஊரில் நடந்து வரும் பணிக்கு நிகரானது இந்த பணியாகும். தென்தமிழ்நாட்டில் இங்குமட்டுமே உலக தரம் வாயந்த அருங்காட்சியகம் பணி நடைபெறுகிறது. எனவே இந்த அருங்காட்சியகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே இவ்விடத்தினை பார்வையிட பல்வேறு இடங்களில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஆர்வலர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்திற்கு இல்லம் தேடி கல்வி சிறப்பு அதிகாரியும், முன்னாள் நெல்லை மாவட்ட சப் கலெக்டருமான இளம் பகவத் வந்து பார்வையிட்டார்.
அவர் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் மூலமாக நடைபெறும் ஒவ்வொரு இடத்திலும் பார்வையிட்டார். ஒரே குழியில் 25க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் வெளியே தெரியும் இடம், ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இடம், சங்க கால மக்கள் பயன்படுத்தி இடம், மூன்றடுக்கு முதுமக்கள் தாழிகள் உள்ள இடம், 2004 ல் அகழாய்வு நடந்த இடம், இரும்பு தொழிற்சாலைகள் இருந்தற்காக அடையாளம், அலெக்ஸாண்டர் ரியா ஆய்வு செய்த இடம் உள்பட பல இடங்களில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகளை பார்வையிட்டார். அவருக்கு தொல்லியல் ஆய்வாளர் எத்திஸ்குமார் விளக்கம் அளித்தார்.
அவருடன் பண்பாட்டு ஆய்வாளர் வெள்உவன், தமிழ் பண்பாண்டு மைய நெல்லை மாவட்ட துணைத்தலைவர் மயன் ரமேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆசிரியர் சிவகளை மாணிக்கம், எழுத்தாளர் சுதாகர், தூத்துக்குடி காமராஜர் கல்லூரி துணை பேராசிரியர் அபிஷ்விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் அவர் சிவகளை தொல்லியல் களத்தினை ஆய்வு செய்ய கிளம்பினார்.


