தூத்துக்குடி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும், தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அவரிடம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக துணைத் தலைவர் எஸ் அந்தோணி முத்துராஜா, செயலாளர் மா. பிரமநாயகம், பொருளாளர் வே.லெட்சுமணன், உறுப்பினர் இரா. ராஜா மோகன் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.
கோரிக்கைகள் விபரம்:
1) கடந்த 145 ஆண்டுகளாக தூத்துக்குடி-சென்னை மற்றும் சென்னை -தூத்துக்குடி இடையே முத்துநகர் அதிவிரைவு ரயில் மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. இதில் எப்போதும் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. மேலும் ஆர் ஏ சி பயணிகள் தூத்துக்குடியில் இருந்து சென்னை வரை படுக்கை வசதி உறுதி செய்யப்படாமல் சென்று கொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் இரவு நேர ரயில் தினசரி இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
2) தூத்துக்குடி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
3) வண்டி எண். 16765-16766 தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயிலில் தினசரி ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
4) வண்டி எண். 22101-22102 மதுரை-லோக் மான்யா திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
5) தூத்துக்குடி- திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
6) தூத்துக்குடி ரயில் நிலையம் வரும் சாலை குறுகலாக உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு கூடுதல் சாலை வசதி செய்து கொடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
7) வண்டி எண். 16791-16792 தூத்துக்குடி- பாலக்காடு, பாலக்காடு தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப்பெட்டி ஒன்றும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்றும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
8) திருச்சி-காரைக்குடி, காரைக்குடி- விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


