தாமிரபரணியில் 1992 க்கு பிறகு மிகப்பெரிய வெள்ளம் வந்து தென் பகுதியை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. சென்னையில் வெள்ளம் வந்த போது கூட திருநெல்வேலி மக்கள் வேறுமாதிரி கூக்குரல் இட்டுக்கொண்டிர்ந்தனர். “தாமிரபரணி வற்றாத ஜீவ நதி வற்றி விட்டது. சாக்கடை கலந்து குடிக்க லாயகற்றதாகிவிட்டது. அமலை செடிகள் அடர்ந்து கெட்ட நீராக ஆகி விட்டது. எங்கள் நதியில் சாக்கடையை கலக்காதீர்கள்”. என்றனர். அவர்களது கூக்குரல் வேறு யாருக்கும் கேட்டதோ இல்லையோ தாமிரபரணிக்கு கேட்டு விட்டது போல. ஒரே நாளில் தாமிரபரணிநதி தனது சீற்றத்தினை ஏற்படுத்தி தன்னை தானே சுத்தப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் நெல்லை தூத்துக்குடியில் 57 பேரை காவு வாங்கி விட்டது. இதை பற்றித்தான் இந்த வாரம் நதிக்கரையோரத்து அற்புதங்கள் கூடுதல் பக்கங்களை எடுத்துக்கொண்டது. இதற்கு வாய்ப்பு தந்த வணக்கம் மும்பை ஆசிரியர் ஜெயஆசீர் அவர்களுக்கு நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023, நவம்பர் மாதம் 17, 18ஆம் தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் தாமிரபரணி ஆறும், வடபகுதியில் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடின. ஆற்றில் வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதே நேரத்தில் மழைநீரும் ஆற்றில் கலந்ததால் வினாடிக்கு 2.5 லட்சம் கன அடி தண்ணீர் கட்டுக்கடங்காத பெருவெள்ளமாக கரை புரண்டு ஓடியது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பேய்மழை என்று சொல்லக்கூடிய அளவில் கொட்டித்தீர்த்த கனமழையால் 95 செ.மீ அளவுக்கு பதிவானது.
2 நாள் பெய்த அதிகனமழையால் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள காரையாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரு வெள்ளம், ஆங்காங்கே குளங்கள் மற்றும் ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு ஆகியவற்றின் காரணமாக நெல்லை. தூத்துக்குடி மாவட்டங்கள் தண்ணீர் தேசமாக்கியது.
தாமிரபரணி ஆற்று வெள்ளம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள பாலம் உள்பட பல்வேறு பாலங்களை மூழ்கடித்தபடி பாய்ந்தோடியது. நெல்லை-திருச்செந்தூர் இடையே பல்வேறு இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தால்த்தால் அரிக்கப்பட்டு, அந்தரத்தில் தொங்கியது.
திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 800 பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இந்த மழையால் சுமார் 10 ஆயிரம் பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர் . 20 ஆயிரக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.

தற்போது பெய்த பேய் மழை 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 1923 ஆம் ஆண்டும் பெய்துள்ளது . அதன் காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு ஏற்படுத்தியது .1923 ஆம் ஆண்டு பெய்த மழை அளவு 42.3 சென்டிமீட்டர் அளவுக்கு பதிவானது. இத்தொடர்பாக வலைதள பதிவாளர் கே ஸ்ரீகாந்த் தனது பதிவில் சில தகவல்களை கூறினார். தென் மாவட்டங்களில் கடந்த 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்து, அதிலும் குறிப்பாக 16 மற்றும் 17 ம் தேதிகளில் கடுமையான மழை பெய்தது .இதன் காரணமாக 24 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேர இடைவெளியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 17 மற்றும் 18ம் தேதிகளில் மொத்தம் 118 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1923 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஒரு வாரத்தில் நெல்லையில் 44.2 சென்டிமீட்டர், கடையத்தில் 43.4 சென்டிமீட்டர் மழை பதிவானது
இதேபோல் பாளையங்கோட்டையில் 37.6 சென்டிமீட்டர், தென்காசியில் 37.2 சென்டிமீட்டர் மழை பெய்தது.
கடந்த 1901 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் 44 முறை 44 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது .இதுபோல் 1914 ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருச்செந்தூரில் 47 முறை 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

தாமிரபரணியில் நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து இதுபோன்று மழை பெய்யும் போதெல்லாம் ,அது சமவெளிப் பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி பலமுறை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. அதுபோலவே இந்த ஆண்டும் நதி நமக்கு பாடம் கற்று தந்து விட்டது.
ஓய்வு பெற்ற சென்னை வானிலை துணை இயக்குனர் ஜெனரல் ஓய். இ .ஏ .ராஜ் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே தமிழ்நாட்டின் சம வெளிப்பகுதியில் பெய்த ஒரு நாள் மழை பொழிவின் அதிகபட்சமாகும்.
கடந்த 1992 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் மாஞ்சோலை அருகே உள்ள காக்காச்சிமலை பகுதியில் பெய்த மழைப்பொழிவு 96.5 சென்டிமீட்டடராகும்.
அதே நேரம் கடந்த 1992 ஆம் ஆண்டு கோதை ஆற்று பகுதியான குதிரைவெட்டியில் கிட்டத்தட்ட 99 சென்டிமீட்டர் மழை பெய்தது . இந்த மழை ஆவணமாக பதிவு செய்யப்படவில்லை என்றார்.
அன்றைய காலகட்டத்தில் பெய்த பேய் மழையால் அப்போது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பெருமளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஆனால் இப்போது உள்ளது போல் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இல்லாததால் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தி இருக்காது.
இப்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்.
தற்போது ஒரே நாளில் வந்து தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் நடந்தது எல்லாம் மாய மந்திரமாக உள்ளது. ஆம். ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் தாமிரபரணி கரையோரத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் வெள்ளத்தில் சிக்கியது. ஒவ்வொரு கிராமமும் தனித்தீவு போன்று ஆனது. மூன்று நாள்கள் பட்டினியாக கிடந்த மக்களை படகு மூலம் பாதுகாப்பு படையினரும், மீனவ மக்களும் சென்று காப்பாற்றினர். பலருக்கு ஹெலிக்காப்டர் மூலமாக உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி கொண்ட 800 பயணிகளை மீட்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இங்கு இருந்த கர்பிணி பெண்ணை ஹெலிகாப்படரில் காப்பாற்றினர். மற்றவர்கள் தண்டவாளம் வழியாக நடந்து தாதன்குளம் வந்து, அங்கிருந்து செய்துங்கநல்லூர் வரவழைக்கப்பட்டு அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு பிரிவினர் வெள்ளூருக்கு நடந்து சென்று அங்கிருந்து பேருந்து மூலம் நெல்லை அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து சென்னைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் வரை வெள்ளம் வற்றியும் கூட, 5 நாள்களுக்கு மேலாக தாமிரபரணியின் கடைபகுதியில் உள்ள பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியே கிடந்தது. புன்னக்காயல், ஏரல், சிறுதொண்டநல்லூர், மணலூர், உண்டியலூர், ஆத்தூர், புல்லாவெளி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து தீவு போல் காட்சி அளிக்கிறது.

தாமிரபரணி பாசனத்தின் கீழ் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பின. பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. பல்வேறு இடங்களில் சாலைகள், பாலங்களே இருந்த இடம் தெரியாத அளவுக்கு அரித்து சென்று விட்டது. பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் மட்டுமே காட்சி அளித்ததால் மக்கள் கண்ணீருடன் தத்தளித்தனர்.
காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு கோரம்பள்ளம் குளத்தை அடைந்தது. தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் தூத்துக்குடி மாநகரையும் சூறையாடியது.
பல ஆயிரக்கணக்கான வீடுகளை சூழ்ந்தது. பலரது வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்ததால் லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்தனர்.
அத்திமரப்பட்டி, வீரநாயக்கன்தட்டு, முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர், குறிஞ்சி நகர், ரகுமத்நகர் உள்ளிட்ட பகுதிகள் குளம் போல் காட்சி அளித்தது. இந்த பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளுக்கும், முகாம்களுக்கும் சென்று விட்டனர்.
வாழ்நாளில் சிறுக சிறுக சேமித்து வாங்கிய ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை பெருவெள்ளம் விழுங்கி கொண்டது. பல இடங்களில் ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி இறந்து உள்ளன. ஆறாம்பண்ணை என்ற ஒரு இடத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மேய்ச்சலுக்கு சென்ற வாத்துக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இறந்த கால்நடைகள் தண்ணீரில் மிதப்பதால் துர்நாற்றம் வீசும் நிலை உருவாகி, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த தந்தை, மகள் வெள்ளத்தில் சிக்கி இறந்து உள்ளனர். முத்தையாபுரம் பகுதியில் பேத்திகளுடன் சென்ற முதியவரையும் மழை வெள்ளம் வாரி சுருட்டி வீசியது. முத்தாலங்குறிச்சி செங்கல் சூளையில் வாலிபர் ஒருவர் வெள்ளத்தினை கடக்கும் போது உயிரிழந்தார். கருங்குளத்தில் பைக் ஒன்றில் லிப்ட் கேட்டு சென்ற இஸ்லாமியர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பிணமாக மீட்க்கப்பட்டார். கருங்குளம் பகுதியில் வெள்ளத்தினை கடக்க முயன்ற வாலிபர் மரத்தில் ஏறி மூன்று நாள் உயிருக்கு போராட, கால்வாய் கிராமத்துக்குமக்ள் அவரை காப்பாற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து விட்டது. மேலும் பல இடங்களில் நிலை என்னவென்று தெரியவில்லை.
தென்னகத்தில் மிகப்பெரிய பஜார் என போற்றப்படும் ஏரல் பகுதி மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது. பஜார் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பலசரக்கு கடைகள், பேக்கரி, ஸ்டேஷனரி கடைகள், பேன்சி ஸ்டோர்கள், ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், ஹோட்டல்கள் என அனைத்து கடைகளும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.
100 கோடி ரூபாய்க்கு மேல் பொருள்கள் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மளிகை கடைகள் மழை வெள்ளத்தில் நனைந்த ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை வியாபாரிகள் வெளியில் கொண்டு கொட்டும் காட்சிகள் பார்ப்போர் கண்ணை கலங்க வைக்கிறது.
மளிகை கடைகளில் பருப்பு உளுந்து உள்பட பொருள்களும் மழையில் நனைந்ததால் அவை அனைத்தையும் கடைக்கு வெளியே கொண்டு குப்பைத்தொட்டியில் கொட்டினர்.
நவதானிய பொருட்கள் முளை விட்டது. பழக்கடைகளில் புகுந்த நீரால் பழங்கள் அனைத்தும் அழுகியது. இதனால் பழங்கள் அனைத்தையும் வியாபாரிகள் குப்பையில் கண்ணீரோடு கொட்டினர்.
ஹார்டுவேர்ஸ் கடையில் மழை நீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைத்து, லட்சக்கணக்கான மரப்பொருள்கள் வீணாகி விட்டது.
ஏரல் பஜார் பகுதியில் இருந்த பேன்சி கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அந்த பொருள்கள் உபயோகமில்லாமல் போய் விட்டது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக செய்யப்பட்ட இனிப்பு பொருட்கள் அனைத்தும் வெள்ளை நீரில் சேதமடைந்து விட்டது. பஜாரில் நின்ற வாகனங்கள் எல்லாம் மழையில் அடித்துச்செல்லப்பட்டு பள்ளத்தில் உருட்டப்பட்டிருந்தது. வெள்ளம் வற்றிய பிறகு அவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்தது.
தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்த நிலையில் குடும்பமே உடுக்க உடையின்றி ஒரே நாளில் ஏழையாகி விட்டார்கள்.

ஏரல் காவல் நிலையத்தில் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு நின்ற மழை வெள்ளத்தால் காவல் நிலைய ஆவணங்கள் சேதமடைந்தது.
உலக தரம் வாய்ந்த சைட் மியூசியம் இந்தியாவிலேயே முதல் முதலாக ஆதிச்சநல்லூர் அமைக்கப்பட்டிருந்தது. 2023 அக்டோபர் 5 ந்தி கனிமொழி எம்.பி. முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அருங்காட்சியகத்தினை திறந்து வைத்தார். மிக உயரமான இடத்தில் இருந்த இந்த சைட் மியூசியமும் மழை நீர்புகுந்து வீணாகி விட்டது. உள்ளே இருந்து காட்சி பழங்காலத்து பொருள்கள், முதுமக்கள் தாழிகள் தண்ணீருக்குள் மூழ்கியது. காட்சிக்கு வைக்கப்பட்ட 2500 வருடம் பழமையான எலும்பு கூடு பாதிக்கப்பட்டது.
தொடர்மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் நெல்லை மாநகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. நெல்லை புறநகர் மாவட்டத்தில் வீரவநல்லூர், சேரன்மகாதேவி, அம்பை, முக்கூடல், மானூர், நாங்குநேரி, திசையன்விளை, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதம் அடைந்து விட்டது.

மழை வெள்ளத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதையெல்லாம் கணக்கில் எடுத்தால் தலை சுற்றி விடுகிறது.
முக்கூடல் அருகே உள்ள ஓடைக்கரைப்பட்டி துலுக்கர்பட்டி வாய்க்காலில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

தாமிரபரணி கரையில் வாழ்ந்த சுமார் 1லட்ச வீடுகளில் வசித்தவர்கள் தங்களது உடமைகளை இழந்து வாழ்வாதரத்தினை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமா, தாமிரபரணியின்பாசனப்பரப்பில் உள்ள சுமார் 48 ஆயிரம் ஏக்கர் பாசனத்தில் உள்ள வாழை மற்றும் நடுவை பயிர்கள் அழிந்து விட்டது. என்ன ஒரு அதிஷ்டம் என்றால் பெரிய அளவில் புயல் காற்று இல்லை. இதனால் மரங்கள் சாயவில்லை. மின் கம்பம் அறுபட வில்லை. அதோடு மட்டுமல்லாமல் அரசு இயந்திரமும் தொண்டு நிறுவனமும் மனிதநேய பண்பாளர்களும் மிக வேகமாக பணி செய்தார்கள்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற இத்தனை படகுகள் இதற்கு முன்னால் வந்து சேரவில்லை. வெள்ளத்தில் மக்கள் சிக்கிய முதல் மூன்று நாள்கள் அனைத்து சமுதாய மக்களும் தங்கள் சொந்த செலவில் சமையல் செய்து மக்களுக்கு வழங்கி வந்தனர். ஊருக்கு ஊர் படகோட்டிகளும் சென்று மக்களை காப்பாற்றி படகில் அழைத்து வந்தனர். தொடர்ந்து 1 வாரம் ஆகியும் கூட இதுவரை மக்கள் பணத்தினை கொடுத்து வருகின்றனர்.

அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் நெல்லை தூத்துக்குடி வந்தார். மக்களை சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓடி வந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க அரசு இயந்திரத்தினை வேகமாக முடுக்கி விட்டார். முற்றிலும் சேதம் அடைந்த கான்கிரீட் வீடுகளுக்கு ரூ.1.20 லட்சம், குடிசை, ஓட்டு வீடுகள் சேதம் அடைந்திருந்தால் ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். உடனடியாக மாவட்டம் முழுவதும் நிவாரண பொருள் வழங்கப்பட்டது . ரேசன் கார்டுவுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்தார். கனிமொழி எம்பி. தூத்துக்குடியில் தண்ணீருக்குள் சென்று மக்களை சந்தித்தார். மாவட்டம் முழுவதும் சென்று மக்களை சந்தித்தார். வேண்டிய உதவிகளை செய்தார். அமைச்சர் கீதா ஜீவன் , வெள்ளம் வரும் முன்பே மக்களை எச்சரிப்பதில் இருந்து அனைத்து வேலையிலும் முன்னணியில் இருந்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் களப்பணிக்கு சென்ற போது வெள்ளத்தில் சிக்கி கொண்டார். ஆனாலும் தொடர்ந்து பணியை செய்து வருகிறார்கள். மற்ற அமைச்சர்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு உள்ளனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்து வெள்ளத்தில் மக்களை சந்தித்தார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல ஊர்களுக்கு சென்று நிவாரண பொருள்கள் வழங்கினார். இதுபோல் அ.ம.மு.க தலைவர் தினகரன் உள்பட மற்ற தலைவர்களும் தென்மாவட்டத்துக்குள் வந்து முகாமிட்டு உள்ளனர்.
1992 ல் வந்த வெள்ளத்தில் கூட இதுபோன்ற நிவாரணம் கிடைக்கவில்லை. மற்ற மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருள்கள் வந்து குவிந்தன. மற்ற மாவட்டங்களில் இருந்து வாங்கி, அரசு சார்பில் கொடுக்கும் பொருள்களை செய்துங்கநல்லூரில் வைத்து சுமார் 1000க்கு மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைத்தனர். சேவை மனப்பான்மை கொண்ட நல்ல உள்ளங்கள் சேவைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. சுமார் 7 நாள்களாக அணையாத அடுப்பாய் செய்துங்கநல்லூர் இளைஞர்கள் சார்பில் உணவு தாயராகி, ஏரல் வரை கொண்டு கொடுத்து வருகிறார்கள்.
1992 ஆம் ஆண்டு வெள்ளத்தில் மக்கள் சீர் நிலைக்கு வர 10 நாள்கள் நீடித்தது. ஆனால் பல இடங்களில் அரசு இயந்திரம் வேகமாக செயல்படுவதால் கிராமங்கள் தன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
சாலைகளை சீரமைத்து, வாகன போக்குவரத்தினை உடனே ஏற்படுத்தியது படிப்படியாக மின்சாரத்தினை எரிய விட்டனர். நிவாரண பொருள்கள் மற்றும் நிவாரண தொகைகளை விரைவாக கொடுத்தனர். ஆனால் ஒரு ஒரு தவறு மட்டும் பெரிதாக நடந்துள்ளது. இந்த வெள்ளத்தில் உடைக்கப்பட்ட நுற்றுக்கணக்கான குளங்களில் ஒரிரு குளங்களை மட்டும் விவசாயிகளே சீரமைத்து உள்ளனர். ஆனால் மற்ற எந்த குளத்தினையும் அரசு சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் தண்ணீர் வற்றிய குளங்களில் நீரை சேகரிக்க முடியவில்லை. இதனால் இந்த வருடம் வெள்ளாமையும் பொய்த்துவிட்டது என்பது மட்டுமே மிகப்பெரிய வேதனையாகிவிட்டது.
மொத்தத்தில் தாமிரபரணி தன்னை தானே சுத்தப்படுத்திக்கொண்டாள். அவளை இனியாவது சாக்கடை கலந்து, நீர்கருவை வளர்த்து, அமலை செடியின் கூடாரமாக மாற்றாமல் இருக்க மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். (நதி வற்றாமல் ஓடும்)


