பனைப் பொருளை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இருக்கிறது. கிள்ளிக்குளத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மண்டல ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வேளாண்மை துறை சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வேளாண்மை சார்ந்த பொருட்களை பார்வையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உள்பட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி.பேசுகையில்,
வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயம் தான் நாட்டின் ஆணிவேர். கொரோனா காலகட்டத்தில் லாக் டவுன் போது மூடப்படாத ஒரே துறை விவசாயத் துறை ஆகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகளின் பிரச்சனைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளை தயார் படுத்த வேண்டும். விவசாய ஆராய்ச்சியில் புதிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு முன்னோடியாக இருக்கிறோம். அது வெளியில் தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் விவசாயம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக உள்ளது. என்றார் அவர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில்,
பனைப் பொருளை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றும் பணியில் வேளாண்மை துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி மையத்தில் புதிய டிப்ளமோ கல்லூரி தொடங்குவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் வேளாண் துறை மூலமாக புதிய தொழில் வளத்தை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


