வேம்பாரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கீழத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் ராஜ். சொந்தமாக ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறார். இவரது ஒரு வயது மகன் மித்ரன் பிறந்தநாள் விழாவிற்கு ஜவுளி எடுப்பதற்காக மகன் மற்றும் மனைவியுடன் சாயல்குடிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
வேம்பார் சவேரியார்புரம் கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லும் போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த 3 பேரும் சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மித்ரன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


