குரும்பூர் ரயில் நிலையத்தில் தாழ்வான நடைமேடையை உயர்ந்த வேண்டும் என மாநில பயணியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலையத்தில் தாழ்வான நடைமேடையை உயர்ந்த வேண்டும் என மாநில பயணியர் நலச்சங்கத் தலைவர் சாந்தகுமார், மத்திய ரயில்வே அமைச்சர், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை _ திருச்செந்தூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது குரும்பூர் ரயில் நிலையம். இந்த நிலையம் அதிக பயணிகளை ஏற்றி இறக்கி அதிக வசூல் பெற்று வரும் நிலையம் ஆகும். ஆனால் மேற்படி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது. மேலும் இங்கு அமைந்துள்ள நடைமேடை உயரம் குறைவாக உள்ளது. இதனால் பயணிகள் வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பெண்கள் மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க அதிக கஷ்டப்படுகிறார்கள்.
அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குரும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் மேற்கூரையும் அமைக்கப்படாமல் உள்ளது இதனால் வெயில் மற்றும் மழை நேரங்களில் பயணிகள் மிகவும் சிரப்படுவதிற்கு ஆளாகின்றனர். மேலும் விழாக்காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குரும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இதனால் இந்த ரயில் நிலையத்தை நம்பி பயணிக்கும் அருகில் உள்ள பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் திருச்செந்தூரில் இருந்து சென்னை, கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில்களை தொடர்ந்து வியாழன் -வெள்ளி- சனி -ஞாயிறு, தினங்களில் இயக்கி இந்த பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருச்செந்தூர் _ பாலக்காடு ரயில் மற்றும் சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.எனவே, விழாக்காலங்களில் திருச்செந்தூரிலிருந்து கூடுதலாக பயணிகள் ரயில்களை இயக்கியும், ஓடுகிற ரயில்களில் கூடுதல் பெட்டிகளையும் இணைக்க வேண்டும். எனவும் இம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


