தூத்துக்குடியில் பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பூங்காவை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.9.91 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டடம், நடுநிலைப்பள்ளி கட்டடம், பூங்காக்கள், நடைபயண பக்தர்கள் ஓய்விடப் பூங்கா உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
விழாவில் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: இன்றையதினம் மகளிருக்கான பூங்காவினை திறந்து வைப்பதில் பெரும் மகழ்ச்சி அடைகிறேன். இந்த மகளிருக்கான பூங்கா என்பது பெண்களுக்கென்று ஒரு தனி இடமாக உள்ளது. எந்தஒரு அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாக பெண்களுக்காக பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடமாகவும், பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து பேணக்கூடிய இடமாகவும் இந்த மகளிர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவியர்கள் வீட்டிலிருக்கும் அம்மா, அக்கா, தங்கை உட்பட அனைத்து பெண்களையும் அழைத்து வந்து பயன்பெற வேண்டும். இதேபோல் மற்றொரு மகளரிருக்கான பூங்கா தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த மகளிர் பூங்காவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆரி ஒர்க், எம்ராய்டிங் ஒர்க், சிறுதானிய உணவு வகைகள் தயாரித்தல், ஓவியப் பயிற்சி, விளையாட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்வது, நகை செய்தல், அழகு கலைப் பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் சார்ந்த பயிற்சிகள் தூத்துக்குடி மாநகராட்சியின் ஏற்பாட்டின்பேரில் புனித சிலுவை மனையியல் கல்லூரியின் மூலமாக நடத்தப்படவுள்ளது. பெண்களால் இதையும் தாண்டி பல்வேறு தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். ஆகையால், ஒவ்வொரு பெண்களும் தங்களது வாழ்க்கைத்தரம் முன்னேறுவதற்கு தேவையான ஒரு இடமாக இந்த மகளிர் பூங்காவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, பெண்கள் ஒருங்கிணைந்து புதிதாக ஒரு தொழில் தொடங்குவது குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும், நேர்முகத்தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும் உள்ளிட்ட தங்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களை பகிரக்கூடிய ஒரு இடமாக இந்த பூங்காவை அனைத்து மகளிர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: மகளிர் நலன் காக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும், மகளிர்கள் தங்களது உடல் நலனைப் பாதுகாத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சிக்கூடம், ஜீம்பா டான்ஸ் என்று சொல்லக்கூடிய நடன அசைவுகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், திறந்தவெளி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த மகளிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் எந்தஒரு செயலையும் திறமையாகக் கையாண்டு வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். எனவே, பெண்களுக்கென்று அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவினை அனைத்து பெண்களும் தவறாது பயன்படுத்திக்கொண்டு உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா, மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவர் தி.கலைச்செல்வி, மேற்கு மண்டலத் தலைவர் கோ.அன்னலட்சுமி, தெற்கு மண்டலத் தலைவர் ஆ.பாலகுருசாமி, முதன்மை செயல் அதிகாரி (என்.எல்.சி) க.அனந்த ராமனுஜம், மாமன்ற உறுப்பினர்கள், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.