மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பெயரில் எக்ஸ்னரோ நிறுவனத்தின் சார்பில் உடையார் பட்டி குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் மரு.சுகுமார் வருகை புரிந்து இருந்தார். எப்போதுமே என் மீது பிரியம் வைத்து நான் தாமிரபரணி நதிக்கு ஆற்றும் பணிக்காக ஆதரவு கரம் நீட்டும் எக்னரோ நிறுவனத்தின் தலைவர் செந்தூர் பாரி அய்யா என்னை அந்த கூட்டத்தில் பிரமாண்டமாக அறிமுகம் செய்தார்கள். மாவட்ட ஆட்சியரும் என் பணியை அவர் பேசும்போது புகழ்ந்தார். மாவட்ட ஆட்சியரை பொறுத்தவரை நாங்கள் தான் அவரை பாராட்ட வேண்டும். குறிப்பாக பாளையங்கால்வாய் , திருநெல்வேலி கால்வாய் சுத்தப்படுத்துதல், தாமிரபரணி ஆற்றில் கருப்பன்துறையில் இருந்து தருவை கிராமம் வரை நீர்கருவை செடியை பிடுங்குதல் என எங்களுக்கு பெரு உதவி புரிந்து கொண்டிருப்பவர். எனவே நாங்கள்தான் அவரை பாராட்ட வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரில் 17 இடத்தில் கழிவு நீர் கலக்கிறது. அதை சுத்திகரித்து அந்தநீரை தாமிரபரணி ஆற்றங்கரையில் மரம் நட்டு வளர்க்க தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கலாம். அதற்கான ஒருங்கிணைப்பை நானும் சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்கமும் செய்து வருகிறோம். அதற்கு அனுமதி தந்து வழிகாட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்தேன். எப்போதும் போலவே இன்முகத்துடன் ஆவண செய்வதாக வாக்களித்தார். எக்னரோ நிறுவனத்தில் தலைவர் பாரி அய்யாவும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று வாக்களித்தார்கள். கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் அவர்களும், எங்களுக்கு நெல்லையில் எந்த உதவி என்றாலும் ஓடோடிவந்து செய்யும் லயன்ஸ் கிளப் திருநெல்வேலி கிரின் சிட்டி பொன் திருமலை முருகன் அய்யாவும், எங்கள் ஊரை பூர்விகமாக கொண்டு உடையார் பட்டியில் வசிக்கும் எம்.எஸ். ராமசாமி அய்யாவும் உதவி புரிவேன் என்று கூறினார்கள். நிச்சயம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெல்லையில் கலக்கும் சாக்கடையை எங்கள் நெல்லை தொழில் அதிபர்கள் மூலம் நிச்சயம் சுத்தம் செய்து, தாமிரபரணியில் கலப்பதை தடுத்து, கரையெங்கும் மரம் நடுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது. விரைவில் சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன், பொதுச்செயலாளர் சங்கர்மணி மற்றும் சங்கத்தினரோடு சென்னையில் சந்திக்க உள்ளேன். தொடர்ந்து அவர்களும் நெல்லை மாவட்ட ஆட்சியரை தொடர்ப்பு கொண்டு பணியை துவங்க உள்ளோம். எக்னரோ உதவியும் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். உங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும் வேண்டுகிறேன் – முத்தாலங்குறிச்சி காமராசு


