சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பழனியப்பபுரத்தைச் சேர்ந்தவர் பத்மநாதன் மகள் சுதா (19). கடந்த 2021ஆம் ஆண்டு இவரை, அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா என்பவர் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுதாவின் பெற்றோர், இசக்கிராஜா மீது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி இசக்கிராஜாவை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், கடந்த 19 ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது இசக்கிராஜாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், இசக்கிராஜா குடும்பத்தினரால் தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சுதா அச்சத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


