
தருவையில் கல்மண்டபத்தினை பார்க்கும் முன்பு அங்குள்ள அதிசய நீர் ஊற்று குறித்து நாம் காணலாம்.
தாமிரபரணி ஆற்றில் சமவெளி பகுதியில் சுமார் 100 இடங்களுக்கு மேல் இதுபோன்ற ஊற்றுகள் முற்காலத்தில் இருந்தன. இதனால்தான் தாமிர பரணி வற்றாத ஜீவ நதியாக இருக்கிறது. தற்போது மணல் மாபியாக்களால் பல நீர் ஊற்றுகள் அழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் ஒருசில இடங்களில் ஊற்றுகள் உண்டு. அதுபோல உள்ள ஒரு ஊற்றுதான் நாம் தற்போது காணும் தருவை பச்சையாறு சங்கமம் அருகில் உள்ள இடத்தில் உள்ள ஊற்று. இந்த ஊற்றில் கோடைக் காலத்திலும் தண்ணீர் வருமாம். மழை காலத்திலும் அதே அளவுதான் தண்ணீர் வருமாம். ஆனால் இந்த ஊற்றின் சுவை தாமிரபரணி போல இருக்காதாம். உப்பு தண்ணீர் போல இருக்கு மாம். ஆச்சரியம் தான் ஆனால் உண்மை. இதை அக்னி தீர்த்தம் என்கிறார்கள் ஆன்மிக வாதிகள். எது எப்படியோ நம்மை பொறுத்த வரை தாமிரபரணியின் காவல் தெய்வங்கள்தான் இந்த ஊற்று. இருக்கும் ஊற்றையாவது அழிக்காமல் காக்க வேண்டும்.
இதே போல் தாமிரபரணியில் அருகன் குளம் என்ற இடத்தில் லட்சுமி நாரயணனர் கோயில் அருகே ஜடாயு தீர்த்தம் ஒன்று உள்ளது. இந்த தீர்த்தத்திலும் எப்போதும் தண்ணீர் வந்து தாமிரபரணியில் கலந்துகொண்டே இருக்கும். தாமிரபரணி பள்ளத்தில் ஓட அதன் நீர் ஊற்று அதே அளவில் தான் நிலத்தடி நீராக இருக்க வேண்டும். ஆனால் தாமிரபரணியில் இதுபோன்ற உயிரோட்டமான ஊற்றுகளில் இருந்து தண்ணீர் பொங்கி தாமிரபரணியில் கலக்கிறது.
ஏரல் அருகே உள்ள லெட்சுமி புரத்தில் உள்ள பாடகர் காந்தி காமராஜ் என்ற எனது நண்பர். தாமிரபரணி ஆற்றில் அவரது ஊர் அருகே உள்ள சொக்கப்ப கரையிலும் இதுபோன்ற ஊற்று உள்ளது என கூறினார். தாமிரபரணி கரையில் இது போன்ற ஊற்றுகள் வரும் இடத்தில் படித்துறைகள் அமைக் கப்பட்டு அதற்கு தீர்த்தம் என பெயர் வைத்து நமது முன் னோர்கள் காப்பாற்றி வந்துள் ளனர். ஆனால் நமக்கு அதற்கான விழிப்புணர்வு இல்லை. எனவே தான் மண்டபங்களையும் படித்துறை களையும் காப்பாற்ற உயர் நீதி மன்ற கதவை தட்ட வேண்டிய நிலையில் உள்ளோம்.
தருவை ஊற்று குறித்து உள்ளூர் பிரமுகர் மனோகர் என்பவரின் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர் கூறிய செய்தி மேலும் எனக்கு ஆச்சரியத்தினை தந்தது.
அவர் இதை ரிஷி தீர்த்தம் என்று கூறினார். நதி மூலம் ரிஷி மூலம் காண இயலாது என்று கூறுவார்கள். அதுபோலவே இந்த ஊற்றின் மூலத்தினை நாம் அறியமுடியாது. இது எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முடியாது ஆகவேதான் இதை ரிஷி தீர்த்தம் என்றழைக்கிறோம் என்கிறார்.
ஆனால் பெரும்பாலோனார் இதை அக்னி தீர்த்தம் என்றே அழைக்கிறார்கள். இதற்கு காரணமாக ஊருக்குள் அக்னீஸ் வரர் ஆலயம் உள்ளது. அந்த ஆலய வரலாற்றை நாம் தொடர்ந்து கூறுவோம்.
இந்த அக்னி தீர்த்தம் குறித்து இவ்வூரைசேர்ந்த பத்திரிக் கையாளர் பிச்சுமணி என்பவர் கூறியது அதிசயமாகவே இருந்தது. கோடைக்காலத்தில் இங்கு நீர் பொங்குவது அதிசயமானதாகும். குறிப்பாக கடந்த வருடம்(2023) பயங்கரமான பஞ்சம் வந்து இந்த பகுதியில் உள்ள வயற்காடுகள் எல்லாம் நீர் வற்றி கிடந்த போது கூட இந்த ஊற்றில் இருந்து எப்போதும் வருவது போல தண்ணீர் வந்து கொண்டிருந்தது. எனவே இந்த ஊற்றை வயற் காட்டில் இருந்துவரும் வடிகால் என்று நினைத்து விட முடியாது.
அதோடு மட்டுமல்லாமல் உள்ளூரில் உள்ள அக்னி ஈஸ்வரர் கோயில் உள்ளே உள்ள தீர்த்தத் துக்கும் இந்த தீர்த்தத்துக்கும் தொடர்ப்பு உள்ளது என்கிறார்.
இந்த தீர்த்தம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு செய்திகளை கூறினாலும் உறுதிப்பட தகவல்கள் வேறு எங்கும் சரிவர பதிவிட வில்லை. எனவே அதை தேடுவது நமது கடமையாகும்.
இந்த இடத்தில் ஜே.சி.பி கொண்டு சுத்தப்படுத்தும் போது கூட நீர் ஊற்றுக்கு எந்தவொரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதில் கவமான இருந்துள் ளனர் இவ்வூர் விவசாயிகள். ஏன் என்றால் தூர் வாருகிறோம் என்ற பெயரில் ஊற்றை அழித்து விடக்கூடாது என்பதில் விவ சாயிகள் கவனமாக இருக் கிறார்கள். இங்குள்ள விவசாயி பெருமாள் என்பவர் கூறும் போது இந்த மண்டபத்திற்கு முன்பு ஒரு நீர் ஊற்று உள்ளது. இந்த நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது என்றே தெரியாது. ஆனால் அங்கு கோடையாக இருந்தாலும் மழையாக இருந் தாலும் சீராக ஒரே மாதிரி தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். அதோடு மட்டு மல்லாமல் அந்த தண்ணீர் தாமிரபரணி தண்ணீர் போல சுவையாக இருக்காது. கிணற்று தண்ணீர்போல இருக்கும்.
அந்த ஊற்று தண்ணீர் சரியாக மண்டபம் முன்புறமாக வந்து தாமிரபரணி ஆற்றில் சேரும். ஆடி அமாவாசை , தை அமாவாசைக்கு இங்கு அர்ச்சகர்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க வருவார்கள். இந்த வருடம்(2024) மண்டபம் மணல் மூடிய காரணத்தினால் வரவில்லை என்று கூறினார்.
எனக்கு இந்த இடத்தினை தீர்த்தம் என்கிறார்களே. இந்த தீர்த்தம் தான் பச்சையாறு சங்கம தீர்த்தமாக இருக்குமோ எனவும் எண்ணத்தோன்றுகிறது. எனவே அதற்கான நூல்களை தேடி பட்டிலிடுகிறேன்.
கோடையிலும் வற்றாமல் ஓடும் நீர் ஊற்று தாமிரபரணி ஆற்றங்கரையில் பல நூறு இடங்களில் உண்டு. இதனால்தான் இந்த நதி வற்றாத ஜீவ நதியாக பெயர் பெற்று வருகிறது. தற்போது மணல் அள்ளிய காரணத்தினால் பல்வேறு நீர் ஊற்றுகள் அழிக்கப் பட்டு விட்டது. தற்போது இதே போல் ஒரு சில ஊற்றுகளே தாமிபரணி நதிக்கரையில் உள்ளது. அதையாவது காப்பாற்ற வேண்டும். இதே போல் அழியும் நிலையில் உள்ள மண்டபங்களை, நீர் ஊற்றுகளை காப்பாற்ற நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்ந்து நாங்கள் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம். அங்கே மண்டபத்துடன் கூடிய ஒரு படித்துறையை கண்டோம்.
இந்த மண்டபம் கடந்த டிசம்பர் மாதம் வந்த வெள்ளத்தில் மணல் மூடி காணப்பட்டது. அவ்விடத்தில் ஏதாவது கல்வெட்டு இருக்குமா என சுற்றி வந்து பார்த்தோம்.
உள்ளே ஒரு ஆள் நுழையும் தருவாயில் இருந்தது. ஆனாலும் உள்ளே நுழைய பயமாக இருந்தது. பாம்பு போன்ற விஷ சந்துகள் உள்ளே இருக்குமோ என பயந்தபடியே சத்தம் கொடுத்துக்கொண்டே உள்ளே சென்றேன். எனக்கு பின்னால் நூலகர் அகிலன் அய்யாவும், செண்பகராமன் அய்யாவும் நுழைந்து வந்தார்கள். அங்கே பிள்ளையார் சிலை இருந்தது. சுமார் 7 தூண் மண்டபம் இது. அருங்கோணத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மண்படத்தில் இருந்து தண்ணீர் வடிய பின் பக்கத்தில் ஓட்டை வைத்து இருந்தார்கள். உள்ளே ஒரளவு வெளிச்சம் தெரிந்தது. வெளிச்சம் வழியாக உள்ளே பார்த்தபோது மண்ட பத்தின் மேல் பகுதியில் இரண்டு மீன் சின்னமும், நடுவில் ஒரு கல்வெட்டு ஒன்றும் காணப்பட்டது. அந்த கல்வெட்டை படிக்க இரண்டு பேரிடம் பொறுப்பை கொடுத்தோம். தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் முனைவர் சுதாகர் ஆகியோரிடம் படத்தினை எடுத்து அனுப்பி வைத்தேன். அவர்களிடம் இருந்து தகவல் வரட்டும் என காத்து இருந்தேன்.
( நதி வற்றாமல் ஓடும்)