ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தார்.
“அகத்தியரை தான் நாம் கும்பிடுதோம். அவரு பொதிகை மலையில இருப்பாரு. அவருக்கிட்ட போய் யோசனை கேப்போமுன்னு அந்த கன்னட பிரம்மசாரி கிளம்பினாரு”.
ராசுக்குட்டி ஆர்வத்துடன் கேட்டான்.
“அகத்தியரை பாக்கிறது சாதரண விசயமா என்ன? இதுக்கு இடையில ராஜா கிட்ட வாங்கின பொன் மூட்டை 10 இருந்துச்சு. அதை பத்திரமா கொடுக்கணும். யாருக்கிட்ட கொடுக்க”.
ஆச்சி சொல்லும் போதே ராசுக்குட்டி ஆர்வம் கூடியது.
“யோசித்தார். அம்பாசமுத்திரம் வந்தாரு. அங்க கோயிலில இருந்த குருக்களை பாத்தாரு. குருக்கள் கிட்டே சாமி, இதுல 10 மூட்டை தவிடு இருக்கு. நான் பொதிய மலை போறேன். போயிட்டு வருத வரைக்கும் பாத்துகோங்கன்னு சொன்னாரு. அவரும் சரின்னு அந்த தவிட்டு மூட்டையை வாங்கி வச்சிககிட்டாரு”.
“அய்யோ தவிட்டு மூட்டையில இருந்த தங்கம் விழுந்தா கண்டுபிடிச்சுகிடுவாரே பொறவு இந்த பிரம்மசாரிக்கிட்டே எங்கே கொடுக்கபோறாரு”. ராசுக்குட்டி ஆச்சரியத்துடன் கேட்டான்.
ஆச்சி சிரித்தப்படியே, “ஏலேய் ராசுக்குட்டி கதையை முழுசாகேளுலே. இடையில மறைச்சி கேட்காத” என்றாள்.
“சரி” என்று வாயை மூடினான் ராசுக்குட்டி. தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள் ஆச்சி.
“கோவில் குருக்களிடம் பொன் மூட்டையை கொடுத்துட்டு அகத்தியரை தேடி அலைஞ்சாரு அந்த பிரம்மச்சாரி. பசி தூக்கம் பாக்காம நடக்க ஆரம்பிச்சாரு. காடு மலை கடந்து பொதிகை மலை மேலே அகத்தியரை பாக்க ஆர்வத்தில் மிக வேகமாக நடந்தாரு. அதுக்கு பொறவு. அவர் ஒரு இடத்தில் களைத்து போய் அங்கேயே படுத்து தூங்கிப் போனாரு. அப்புறம் அவரால் எழுந்து நடக்க முடியலை. எழுந்து எழுந்து பார்த்தாரு. கண் இருட்டி க்கிட்டே இருந்துச்சு. கடைசியிலே மயக்கமாகிட்டாரு. கடைசியில மயங்கி விழப்போனவரை ஒரு உருவம் தாங்கி பிடிச்சது. அந்த உருவம் அகத்தியர்தான்”.
மூச்சு விட்டாள் ஆச்சி.
“அகத்தியர் என்ன சொன்னாரு ஆச்சி”.
ராசுக்குட்டி கேட்டான்.
“சொல்லுதேன்”. தொடர்ந்து பேச ஆரம்பித்தாள் ஆச்சி.
“அகத்தியர் கன்னட பிரம்மச்சாரியை இளைப்பாரச் செய்தார். பொதிகை மலையில் இருந்த அகத்தியர் தனது ஞானதிருஷ்டியால் கன்னட பிரம்மச்சாரி வருவதை பாத்துட்டாரு. இடையிலேயே வழி மறிச்சி நிறுத்திட்டாரு. ஆனாலும் பிரம்மசாரிக்கிட்ட கொஞ்சம் விளையாட ஆசைப்பட்டாரு அகத்தியரு. ஆகவே மயக்கம் தெளிந்தவுடன் வேகமாகக் கிளம்பிய அந்த பிரம்மச்சாரியை வழி மறித்து Ôதம்பி நீ எங்கே போகிறாய்Õ என்று கேட்டாரு”.
“இவருத்தான் அகத்தியருன்னு தெரியாமலேயே அந்த பிரம்மசாரி நான் அகத்தியரைப் பார்க்கப்போறேன்னு சொல்லியிருக்காரு. உடனே அந்த முதியவர், Ôஅகத்தியரா…? உனக்கு வேற வேலை கிடையாதா..? சித்தன் போக்கு சிவன் போக்குன்னு சொல்வாகளே கேள்விப்பட்டிருக்கிறாயா..? அது போலத்தான் அகத்தியரும் எங்கே இருக்கிறாரோ..? அவருக்காக நீ… கல்லிலும் மலையிலும் ஏறணுமா? என வயதானவர் வேடத்தில் இருந்த அகத்தியரு கேட்டாரு”.
“அவரை முறைச்சுப் பார்த்தான் கன்னட பிரம்மச்சாரி “தாத்தா என்னைத் தடுக்காதீய, நான் அகத்திய மாமுனியைப் பார்த்தே தீருவேன்” என்று அடம் பிடிகக அங்கிருந்து அந்தக் கிழ வேஷம் போட்ட அகத்தியரிடம் இருந்து தப்பிச்சு நடந்தான் அந்த பிரம்மசாரி”.
ஆச்சி சொல்ற கதையை ஆர்வத்தோடகேட்டான் ராசுக்குட்டி.
“அவரு வைராக்கியத்தையும், அகத்தியர் மேலுள்ள பாசத்தைக் கண்டு ஆனந்தம் அடைஞ்சாரு அகத்தியர். அடுத்த நிமிசம் பொறுமை இழந்தாரு அகத்தியரு. இதனால பிரம்மசாரி முன்னால குள்ள முனியாக காட்சி கொடுத்தாரு.
அகத்தியரை பார்த்த வுடனே நெடுஞ்சாண் கிடையா கிடந்து கும்பிட்டாரு பிரம்மசாரி. கண்ணீர் மல்க நின்னாரு. தான் செஞ்ச காரியத்தினால புண்ணியம் போயி பாவத்தை சுமந்துக்கிட்டு இருக்க கதையை சொன்னாரு. நான் பாவ மூட்டையா 10 பொன் மூட்டையை வச்சிருககேன். அதை வச்சி என்ன புண்ணியம் எனக்கு நிம்மதி இல்லை. பகவானே நீர் தான் எனக்கு நிம்மதியை தரணும். நல்ல வழி காட்டணுமுன்னு உருகி நின்னாரு.
அகத்தியரு யோசித்தாரு. நீ நல்லது தான் செஞ்சுருக்க. ஆனாலும் பூர்வ ஜென்மம் உன்னைஆட்டி படைக்கு. சரி இருந்தாலும் உம் பாவத்தை கழிக்க வழிச்சொல்லுதேன்னு சொல்ல ஆரம்பிச்சாரு”.
“வாலிபனே, ஒரு பசு இந்த இடத்தில தோன்றும். அந்தப் பசு வாலை நீ பிடித்துக் கொள்ளு. அது தாமிரபரணி கரையில் போய் நிக்கும். அந்த இடத்தில் ஒரு அணையைக் கட்டு. அப்புறம் அந்த அணையில் இருந்து கால்வாய் வெட்டு, அந்தக் கால்வாய் எப்படி வெட்டணுமுன்னு பசுவின் வாலை நீ பிடிச்சு நிற்கும் போது தெரியும். அது ஓட ஆரம்பிக்கும். வாலை பிடிச்சிக்கிட்டே பின்னால ஓடு. அது ஓடுற வழியை அடையாளம் கண்டு பின்னாலே கால்வாயை வெட்டு. அந்தப் பசு எங்கெல்லாம் சாணம் போடுதோ அங்கெல்லாம் ஒரு மடையை வையி. பசு எங்குச் சிறுநீர் கழிக்குதோ, அங்க ஒரு வடிகால் கட்டு, பசு எங்கெல்லாம் படுத்து கிடக்கோ அந்த இடத்தில் குளங்களை வெட்டு. ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் பசு உன்னோட பார்வையை விட்டு மறைஞ்சி விடும். அப்புறம் நீ கால்வாய் தோண்டுவதை நிறுத்திடு என்று அகத்தியர் சொல்லி முடித்தாரு”.
ஆச்சி கதை சொல்வதை நிறுத்தி பெரும் மூச்சி விட்டாள்.
“அமைதியா இருந்தான் கன்னடியன். இந்த காரியத்தை நாம செய்ய முடியமா? செய்தாலும் பாவம் நீங்குமா? என மனதுக்குள் நினைத்தான். இது அகத்தியருக்கு புரிஞ்சு போச்சி. அவரை அவனுக்கு பதிலும் சொன்னாரு. இளை-ஞனே இந்தக் கால்வாய் வெட்டும் போது மனிதர்களும், மிருகங்களும் தாகம் தீர்த்துக் கொள்ளவும், அவர்களின் புற அழுக்கு தீர குளித்து மகிழவும், பயிர்கள் விளைந்து நாட்டில் செழிப்பு தரவும், அதன் மூலம் பலரின் பசி தீரவும் பயன் கிடைக்கும். இதனால் மக்களுக்கு நீ பெரிய உபகாரம் செய்கிறாய். ஆகவே உன் தோஷம் நீங்கி நீ புண்ணிய லோகம் அடைவாய். உனக்கு கீர்த்தி உண்டாகும் என்று கூறினார்”.
கதை கேட்டுக்கொண்டிருந்த ராசுக்குட்டியும் சந்தோசமடைந்தான். ஆச்சி தொடர்ந்து கதைசொல்ல ஆரம்பித்தாள்.
“உடனே நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து அகத்தியரை கன்னடி பிரம்மசாரி இளைஞன் வழங்கினான். கங்கையில் இருந்து காவேரியையும், தாமிரபரணியையும் உருவாக்கிய அகத்திய மாமுனிவரே கன்னட பிரம்மச்சாரி மூலம் தாமிரபரணியில் முதல் கால்வாயை வெட்ட காரணமாக இருந்தாரு. இது பிரமச்சாரிக்கு நல்லா தெரிஞ்சுது.
கன்னட பிரம்மச்சாரியிடம் போதனை சொன்ன அகத்தியர் மறுநிமிசம் மறைஞ்சு போயிட்டாரு. உடனே அந்த இடத்தில பசு தோன்றிச்சு. பசுவின் வாலைக் கன்னடியன் பிடிச்சிகிட்டாரு. அந்தப் பசு பிரம்மசாரியோட கால்வாய் வெட்டப்பட வேண்டிய இடத்திற்கு வந்து சேந்துச்சு”.
ராசுக்குட்டி கதையை கேட்டுக்கொண்டே ஆச்சியின் மடியில் படுத்தான்.
அங்கிருந்து பிரம்மச்சாரி பசு வாலைப் பிடித்து கொள்ளப் பசு ஓட ஆரம்பிச்சுது. அது எங்கு சாணம் போட்டதோ அதைக் குறிச்சிக்கிட்டாரு. சிறுநீர் கழிச்ச இடத்தையும் குறிச்சிக்கிட்டாரு. அப்புறம் பசு எங்கப் படுத்ததோ அதையும் குறிச்சிகிட்டாரு. கன்னட பிரம்மச்சாரியைப் பொறுத்தவரை உலகத்திற்கு உதவ வேண்டுமுன்னு மாட்டோடு இழுபட்டுக் கொண்டு ஓடினாரு. சீனியாபுரமுன்னு ஒரு சின்ன ஊரு. அங்க கலாசி ன்னு ஒரு தாசி வீட்டுக்குள்ள பசு ஓடிச்சி. அதையும் பிரம்மச்சாரி அடையாளம் குறிச்சிகிட்டாரு.
இதைப் பார்த்துக் கிட்டுருந்த கலாசி, பசுவை வழி மறிச்சி “யார் நீ, எதுக்கு என் வீட்டுக்குள்ள பசுவைக் கொண்டு வந்த. அடையாளம் வேறெ குறிக்க ” ன்னு கேட்டா. பிரம்மச்சாரி, தன் பட்ட பாவத்தையும் அகத்தியர் போட்ட கட்டளையையும் சொன்னாரு. “நான் பாவத்தைப் போக்கக் கால்வாய் வெட்டப் போறேன். அகத்தியர் அருளிய இந்தப் பசு மூலம் தடம் அமைச்சிக்கிட்டு இருக்கேன். உனக்கு வேண்டிய பொன்மணிகளைக் கட்டாயம் நஷ்ட ஈடா தந்துடுவேன். இவ்வழியாகக் கால்வாய் வெட்டுவேன்னு சொன்னாரு.
உடனே ஆனந்தம் அடைந்த கலாசி , இங்கே பாருங்க நீங்க நல்ல காரியத்துக்குத்தான் இந்தக் கால்வாய் வெட்டப் போறீய. கால்வாய் வெட்டும் போது இப்பகுதியில் உள்ளப் பயிர்களும், எனது நிலபுலன்களும் விளையும். ஆகவே எனக்கு நஷ்டஈடு எதுவும் தர வேண்டாம் முன்னு சொல்லிட்டாக. தாசியின் சொல்லை கேட்டு அப்படியே சந்தோசமடைஞ்சி போயிட்டாரு கன்னடியன். அவளை வணங்கி நின்றாரு. அப்புறம் பசு ஓட ஆரம்பிச்சுது. வாலை பிடிச்சிக்கிட்டே பின்னால ஒடினாரு.
கடைசியில பரந்தாரி என்னும் கிராமத்தில் இருந்த வறண்ட கால்வாயில போய் பசு நின்னுச்சு. அந்த இடம் தான் பிராஞ்சேரின்னு சொல்லுதாவ”.
ஆச்சி ராசுககுட்டி தலையை வருடிகொடுத்தாள்.
“இம்ம கால்வாய் வெட்ட பணி ஆரம்பிக்கணும். அதுக்காக அம்பாசமுத்திரம் போய் குருக்களைப் பாக்கணும். பொன் பொருளை வாங்கணும். அவசரமாகக் கன்னட பிரம்மச்சாரி அம்பாசமுத்திரத்துக்கு ஓடினாரு. அங்க போய் குருக்கள் கிட்ட பொன் மூட்டையைக் கேட்டாரு. குருக்களும் சந்தோசமா பொன் மூட்டையைக் கொடுத்தாரு”.
ராசுக்குட்டிக்கு ஆர்வம் அதிகமானது.
“ஆனால் அவர் கொடுத்த மூட்டையில் பொன் இல்லை தவிடுதான் இருந்துச்சு. அதிர்ச்சி அடைஞ்சு போனாரு கன்னட பிரம்மச்சாரி, அய்யோ மோசம் போயிட்டோமே! இனி எப்படி கால்வாய் வெட்டுவோமுன்னு நினைச்சு மனமுடைஞ்சு போனாரு”.
“நினைச்சேன் இப்படித்தான் சொல்லுவாருன்னு நினைச்சேன்” ராசுக்குட்டி அதிர்ச்சியாக எழுந்தான்.
“இம்ம என்ன செய்ய..?ன்னு புலம்பினாரு. குருக்கள் கிட்டே சாமி நான் பொன் மூட்டை தந்தேன்னு சொன்னாரு. ஆனால் குருக்கள் கேட்கவே இல்லை. நீ என்னிடம் மூட்டையை தரும்போது தவிட்டு மூட்டை ன்னு தானே கூறினாய். அதே போல் தவிட்டு மூட்டை தானே இருக்குன்னு சொல்லிட்டாரு. அவரை கொரை சொல்ல முடியாது. பொன் மூட்டையைக் கொடுக்கும் போது பேச்சுக்கு அது தவிட்டு மூட்டைன்னு பிரம்மச்சாரி சொல்லி இருந்தார். அதைக் கெட்டியாகப் பிடிச்சுகிட்டாரு குருக்கள்”.
“இதனால் நியாயம் கேட்க ராசாவிடம் ஓடினாரு பிரம்மச்சாரி. கன்னட பிரம்மச்சாரிக்கு ஒன்னும் ஓடலை. என்ன செய்வது? யாரிடம் போய் நியாயம் கேட்பது ன்னு ஒன்னும் புரியலை. அப்போ அம்பாசமுத்திரம் கேரள மகாராஜா எல்லைக்குள்ள தான் இருந்துச்சு. கன்னட பிரம்மச்சாரிக்குத் தானம் கொடுத்த ராஜா தான் இருந்தாரு”.
“ராஜாவுக்கு பிரம்மச்சாரியை நல்லா தெரியும். தனது நோயைத் தீர்த்து அதன் மூலம் நல்ல காரியம் செய்யத் துடிக்கும் இளைஞன். அவன் மேலே அளவற்ற மரியாதை வைச்சிருந்தாரு. பொன் மூட்டையைக் கொடுத்ததும் அவரே. அதை நல்ல வழியில் செலவழிக்க நினைச்சாரு. இப்பே £வறுமை காரணமாகக் கோயில் குரு பொய் சொல்லுறாரு. என்ன செய்ய. சிவாச்சாரியாரான குருக்களையும் பகைக்கக்கூடாது. அதே நேரம் கன்னட பிரம்மச்சாரியின் நல்ல காரியத்துக்கும் ஒத்துழைக்கணும். என்ன செய்யலாமுன்னு யோசிச்சாரு.
ராஜா கோவில் குருக்களைக் கூப்பிட்டாரு. கன்னடப் பிரம்மச்சாரி உம்ம மேலே மனு கொடுத்துருகாருவே. பொய் சொல்லாம உண்மையை சொல்லுமுன்னு கேட்டாரு. ஆனால் கோவில் குருக்கள், கன்னடர் கொடுத்தது தவிட்டு மூட்டையே! அதுதான் இருக்குன்னு அடிச்சு சொன்னாரு.
மறுகட்டம் என்ன செய்யன்னு தெரியாம தவிச்சாரு ராஜா”.
ராசுக்குட்டி இனிமே ஆச்சி என்ன சொல்லப் போறோன்னு எதிர்பார்ப்போட இருந்தான்.
( ஆச்சிதொடர்ந்து கதை சொல்லுவாள்)


