ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாரச்சந்தை துவங்குவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 25 ஆண்டுளுக்கு முன்பு வாரச்சந்தை நடைபெற்று வந்தது. வாரத்தில் ஒருநாள் நடைபெற்ற இந்த சந்தையில் ஜவுளி, கருவாடு, காய்கறிகள், மளிகைபொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் இந்த சந்தை பல்வேறு காரணங்களால் செயல்படாமல் போய் விட்டது.
இதனால் சந்தை இருந்த இடத்தில் மீன்கடைகள், கறிக்கடைகள் மட்டும் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், செய்துங்கநல்லூர், ஏரல், பேய்குளம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் தற்பொழும் நடைபெற்று வரும் வாரசந்தையில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை குறைவாக இருப்பதால் ஸ்ரீவைகுண்டத்திலும் மீண்டும் வாரச்சந்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகள் சங்கத்தினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இக்கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், சார்&ஆட்சியர் பிரசாந்த் ஆலோசனையின்பேரில், மீண்டும் வாரசந்தையை துவங்குவதற்கான பணிகளை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ்பயஸ்அருள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் ரெங்கசாமி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து குப்பைகள் நிறைந்துகிடந்த சந்தை பகுதிகள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. சந்தையின் ஒரு பகுதியில் வளர்ந்து இருந்த கருவேலமரங்கள் அகற்றப்பட்டன.
மேடு பள்ளமாக இருந்த பகுதிகள் மண் கொட்டி சரிசெய்யும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வட்டாட்சியர் தாமஸ்பயஸ் அருள், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வபிரசாத், பேரூராட்சி செயல்அலுவலர் மணிமொழியன் ரெங்கசாமி உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
இப்பணிகளைத்தொடர்ந்து, சந்தையில் உடைந்த நிலையில் ஓடுகளால் ஆன மேற்கூரைகளை சீரமைக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு வரும் நாட்களில் சந்தை செயல்பாட்டுக்கு வரும். வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் வரவேற்பை பொறுத்து தினசரி சந்தையாக பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், வாரசந்தையில் கடைகளை அமைக்க விரும்பும் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெறலாம் என வட்டாட்சியர் தாமஸ்பயஸ் அருள் தெரிவித்தார்.


